Skip to main content

நினைவு அலைகள் - டாக்டர் தி சே செள ராஜன்

நவீன தமிழிலக்கியத்தின் முதல் விமர்சகராகக் கருதப்படும் க நா சு வின் பரிந்துரைகள் இன்னமும் முக்கியமானவையாகவே கருதப்படுகின்றன. அவர் இந்த நூலைப் பற்றி உயர்வாகவே எழுதியுள்ளது இந்த புத்தகத்தைப் பரிந்துரைக்க ஒரு காரணம். நான் ராஜனின் தமிழ் நாட்டில் காந்தி படித்திருக்கிறேன். அவரின் எளிய நடை அப்போதே பிடித்திருந்தது.

இந்த நூலின் நடையைப் பற்றியும் சொல்ல வேண்டும். இந்திய சுதந்தரப் போரட்ட வரலாற்றின் பெரும் மனிதர்கள் இவரின் எளிமையான மொழி நடையில் இயல்பாக வந்து போகின்றனர். அலங்காரங்களற்ற மின்னும் எளிமையின் அழகு படிக்க இனிமையானது. தொழில் முறையில் மருத்துவரான இவருக்கு எளிய தமிழ் வாய்க்கப்பெற்றிருக்கிறது. அவரது வைணவ பின்புலம் நிச்சயம் உதவியிருக்கிறது.

இளமையில் ஏழ்மையில் தான் இருந்துள்ளார். ஆனால் ஏழ்மை ஒரு சாதாரணமான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது. உறுதியோடு மருத்துவம் பயின்று பர்மா சென்றிருக்கிறார். தன் வரலாற்று நூலைப்பற்றி எழுத நேரும் போது புத்தகத்தின் தகவல்களை எழுத நேர்ந்து விடுகிறது. நாம் அறிந்த காலகட்டத்தில் நமக்கு தெரிந்த வரலாற்று தகவல்களின் இடைவெளிகளில் ஒளி பாய்ச்சியிருக்கிறார் ராஜன்.

வெறும் தகவலாகவோ கதைபோலவோ பயின்ற வ.உ.சியின் சுதேசிக்கப்பலில் ராஜன் பயணித்திருக்கிறார். தமிழகத்தில் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும் சுதந்தர போரட்டக்களமாக இருந்த தூத்துக்குடி, திருநெல்வேலியில் முக்கிய தளகர்த்தர் வ.வே.சு ஐயர். அவருக்கே சுதந்தர உணர்வு விநாயக் சாவர்க்கரால் கிடைத்திருகிறது. லண்டனில் இந்தியர் விடுதியில் அவர்களுடன் ராஜனும் தங்கியிருந்து அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்திருக்கிறார். அவர்களில் ஒருவர் (லண்டனில் ஆங்கில அதிகாரியைக் கொலை செய்ததற்காக) தூக்கிலிடப்பட்டதையும் (மதன்லால் திங்ரா), அந்தமானுக்கு தீவாந்தரம் அனுப்பப்பட்டதையும் (அநேகமாக சாவர்க்கர்) குறிப்பிடுகிறார். இவரையும் உளவு பார்த்திருக்கிறார்கள். தூத்துக்குடிக்கு வந்து இறங்கியவுடன் விசாரிக்கவும் செய்திருக்கிறார்கள்.

ராஜனே பின்பு காந்தியுடனும் ராஜாஜியுடனும் நெருங்கி அவர்களின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார். அக்காலத்தைய காங்கிரஸின் தீவிரவாதிகளுடனும் மிதவாதிகளுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

ஸ்ரீரங்கம் வைதீகத்தின் கோட்டையென்று ராஜனே பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவர் வாழ்வில் பெரும் நெருக்கடிகளை சந்தித்திருக்கிறார். கடல் தாண்டி பர்மா மற்றும் லண்டன் போனதால், ஆலய நுழைவு போரட்டத்தை தமிழகத்தில் தலைமையேற்று நடத்தியதால் என பல நிகழ்வுகள். தமிழ்நாட்டின் ஆலய நுழைவு போராட்டத்திற்கு யார் யாரோ உரிமை கொண்டாடும் காலத்தில் இவரை அநேகமாக அனைவருமே மறந்துவிட்டிருக்கிறோம். ராஜன் நெருக்கடிகளால் சோர்ந்தும் போகவில்லை , நெருப்பாற்றில் நீந்தியதாய் அலங்காரமாய் மார்தட்டிக்கொள்ளவுமில்லை. வடகலை வைணவ ஜீயரின் கௌரவமான ஆலய தரிசனத்திற்கு இவரே பின்பு உதவியுமிருக்கிறார்.

இவர் தமிழ்நாட்டின் உப்பு சத்தியாகிரகத்திற்கும் தலைமையேற்றிருக்கிறார். போராட்டம் கைது நடவடிக்கையால் தடைபடாமல் இருக்க ஸ்ரீரங்கத்திலேயே இருந்திருக்கிறார். பின்பு வேதாரண்யத்திற்கு சென்று கைதாயிருக்கிறார்.

குறுகிய காலமே மந்திரியாக இருந்த இவரின் காலத்திலேயே தமிழ்நாட்டின் குடிநீருக்கு திட்டம் தீட்ட ராஜாஜி பணித்திருக்கிறார்.

இதையெல்லாம் விட ஆச்சர்யம், காந்தியின் வாக்கை வேதமாக எண்ணி மருத்துவ தொழிலை விட்டுவிட்டு கிராமத்துக்கு சென்று விவசாயம் பார்த்திருக்கிறார்.

இவ்வளவு உழைப்பும், படிப்பும், மாமனிதர்கள் நிரம்பிய வாழ்க்கையை எளிய அழகான வாக்கியங்களால் ஒளிரச்செய்திருக்கிறார்.

Comments

Popular posts from this blog

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...

கி ரா மற்றும் கோபல்ல கிராமம்

எழுத்தாளர் கிராவின் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், மறைவாய் சொன்ன கதைகள், கிடை (குறுநாவல்), மாயமான் தொகுப்பில் சில கதைகள் மற்றும் கி.ராஜநாரயணன் கதைகள் தொகுப்பில் சில கதைகள் என வாசித்திருக்கிறேன். புதுவை இளவேனில் தொகுத்த உயிர்க்கோடுகள் நூலின் சில பகுதிகளை கிராவின் எழுத்துக்காகவும் ஓவியர் ஆதிமூலத்தின் அழகான கோட்டோவியங்களுக்காவும் படித்திருக்கிறேன். கோபல்ல கிராமம் நாவலை முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு வாசித்தேன். நான் வாசித்த கிராவின் முதல் நூல் அது. அனைவரையும் போல அழகான வட்டார எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது வாசிக்கும் போது புதிய சில தெளிவுகள் கிடைத்தன.  விடியலை இரவு உயிர்களை முன்வைத்து சொல்லியிருப்பதே அழகாயிருந்தது ( இரவு தூங்க ஆரம்பித்துப் பகல் விழிக்கப் போகும் நேரம். ) பசு / எருமை, தென்னை/பனை போன்றவற்றை பிரம்மா விஸ்வாமித்திரனை முன்வைத்து கிரா எழுதியிருப்பது  // போட்டி உலகத்தை உண்டாக்கிய விஸ்வாமித்திரன்தான் பசுமாடுகளுக்குப் போட்டியாக எருமை மாடுகளையும், தென்னைமரத்துக்குப் போட்டியாக பனை மரத்தையும், மூஞ்சூறுக்குப் போட்டியாக பெருச்சாளியையும் உண்டாக்...