நண்பர்களுக்கு வணக்கம். என் பெயர் வெங்கடாசலம். நான் Popular science எனும் வகைமையைச் சார்ந்த Mauve எனும் புத்தகத்தை அண்மையில் படித்தேன். புத்தகத்தைப் பற்றிய சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். முதன்மையாக இது ஒரு வாழக்கை வரலாற்று நூல். William Perkin எனும் வேதியியல் விஞ்ஞானியின் வாழ்க்கை, அவரின் கண்டுபிடிப்பு மற்றும் அதனால் தொழிற்துறையிலும் அறிவியல் துறையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் தான் புத்தகத்தின் சாரம். முதலில் William Perkin பற்றியும் அவர் எவ்வாறு இந்த கண்டுபிடிப்பை நோக்கிச் சென்றார் என்றும் பார்ப்போம். William Perkin 1838 இல் பிறந்தார். அவர் தந்தை தச்சுத்தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பெர்கினுக்கு இளைய வயதில் நிறைய விஷயங்களில் ஆர்வம் இருந்தது. வேதியியல் ஆர்வம் பின்னாட்களில் தான் வந்தது. ஆனால், அவரின் தாத்தா ரசவாதி என பெயர் பெற்றிருந்தார். இப்போது அக்காலத்தில் இருந்த அறிவியல் தேவைகளையும் பிற முன்னேற்பாடுகளைப் பற்றியும் சில வார்த்தைகள். 19ஆம் நூற்றண்டில் வெப்பமண்டல காலனிய நாடுகளில் இருந்த ஆங்கில சிப்பாய்கள் நிறைய பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். ...