பயணங்களின் அழகியலை நல்ல அனுபவமாகவும் ரசிக்கக் கற்றுக் கொண்டது இந்த காரைக்குடியிலிருந்து மாலை நேரத்தில் தொடங்கி மறுநாள் காலையில் காஞ்சிபுரம் ஐயங்கார்குளத்தில் (பூர்வீகம்) முடிவடையும் ஓர் அற்புதமான பயணத்தில் தான். 2001 இல் கருணாநிதியைக் கைது செய்த அதே தினம் பேருந்துகள் கிடைக்காததால் செங்கல்பட்டில் இருந்து காரைக்குடியை நோக்கிய எனது பயணம் முன் கண்ணாடி உடைக்கப் பட்ட அரசு விரைவுப் பேருந்தின் வழியே இனிதே தொடங்கியது. திருச்சியில் இறங்கும் போது எங்க ஊர் பொன்னியம்மன் திருவிழாவில் சாயங்களைப் பூசி தெருவில் கூத்தாடி செல்பவர் போல கரிப் பூசி இறங்கினேன். காரைக்குடி அழகப்பர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த இரண்டு வாரங்கள் என் அந்தரங்க எண்ணஙகளை எனக்குள்ளாகவே பேசிக்கொண்டிருக்க வேண்டிய ஒரு நிலையில் மட்டுமே இருந்தேன். என் ஊர்க்காரன் தணிகா நீ homesick ன்னு கேட்டபோது நான் முழித்த முழி நான் எப்படி 18 வருஷம் ஒரெ வீட்டில் இருந்துட்டு இப்படி ஒரு இடத்துல வந்து இருக்கேன்னு அவனுக்கு புரிஞ்சுடுச்சி.இந்த வாரம் எல்லாரும் ஊருக்கு போலாம்னு இருக்கோம் நீயும் வான்னு சொல்லிட்டுப் போனான். எப்போதுமே அதிக அனுபவங்களைத் தந்தது...