எழுத்தாளர் கிராவின் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், மறைவாய் சொன்ன கதைகள், கிடை (குறுநாவல்), மாயமான் தொகுப்பில் சில கதைகள் மற்றும் கி.ராஜநாரயணன் கதைகள் தொகுப்பில் சில கதைகள் என வாசித்திருக்கிறேன். புதுவை இளவேனில் தொகுத்த உயிர்க்கோடுகள் நூலின் சில பகுதிகளை கிராவின் எழுத்துக்காகவும் ஓவியர் ஆதிமூலத்தின் அழகான கோட்டோவியங்களுக்காவும் படித்திருக்கிறேன். கோபல்ல கிராமம் நாவலை முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு வாசித்தேன். நான் வாசித்த கிராவின் முதல் நூல் அது. அனைவரையும் போல அழகான வட்டார எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது வாசிக்கும் போது புதிய சில தெளிவுகள் கிடைத்தன. விடியலை இரவு உயிர்களை முன்வைத்து சொல்லியிருப்பதே அழகாயிருந்தது ( இரவு தூங்க ஆரம்பித்துப் பகல் விழிக்கப் போகும் நேரம். ) பசு / எருமை, தென்னை/பனை போன்றவற்றை பிரம்மா விஸ்வாமித்திரனை முன்வைத்து கிரா எழுதியிருப்பது // போட்டி உலகத்தை உண்டாக்கிய விஸ்வாமித்திரன்தான் பசுமாடுகளுக்குப் போட்டியாக எருமை மாடுகளையும், தென்னைமரத்துக்குப் போட்டியாக பனை மரத்தையும், மூஞ்சூறுக்குப் போட்டியாக பெருச்சாளியையும் உண்டாக்...