நாட்டாரியல் ஆய்வாளர் தொ.பரமசிவனின் அறியப்படாத தமிழகம் புத்தகத்தின் சில பகுதிகளை முன்பே படித்திருக்கிறேன். பண்படுதல் குழும வாசிப்புக்காக அறியப்படாத தமிழகம் மற்றும் அழகர் கோயில் புத்தகங்களை இப்போது படித்தேன். ஏற்கனவே திரு அ.கா.பெருமாளின் ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் நூலை முழுமையாகவும் சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம் நூலின் சில பகுதிகளையும் படித்திருக்கிறேன். திரு.அ.கா.பெருமாளின் சில நாட்டாரியல் ஆய்வு நூல்களையும் படித்திருக்கிறேன். அவற்றை வாசிப்பது எப்போதும் மகிழ்ச்சியையும் பால்ய காலத்தின் நினைவுகளையும் தூண்டும். கிராமத்தின் எல்லாத்திசைகளிலும் ஏரி, ஏரிக்கொரு காவல் தெய்வமென்னும் ஊரில் பிறந்து வளர்ந்ததால் இருக்கும். இரண்டில் எனக்கு பிடித்த நூல் அழகர் கோயில் தான். சங்க காலத்திலிருந்து இன்று வரை வாழும் ஆலயத்தை மையமாகக் கொண்ட கதைகள், வரலாற்று சம்பவங்கள் என ஏராளமான தகவல்களைத் திரட்டி தொகுத்தளித்திருக்கிறார். காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப் பெருமாள் (தேவராஜர், அத்தி வரதர், கரி வரதர் என்ற பெயர்களுமுண்டு) சித்திரை பௌர்ணமியில் தெற்கு நோக்கி ஏறக்குறைய பத்து கிராமங்களுக்கு வந்து, எங்களூரில...