தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதிய The Eye Of The Serpent என்ற நூலை திரு.லதானந்த் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நான் தியடோர் பாஸ்கரனின் எம் தமிழர் செய்த படம் என்ற நூலை முன்பே வாசித்திருக்கிறேன். இந்த நூல்தான் முதலில் எழுதப்பட்டது என்றாலும், ஏற்கனவே எம் தமிழர் செய்த படம் புத்தகத்தில் உள்ள தகவல்கள் நிறைய இதிலும் உள்ளதால் படிப்பதிலுள்ள ஆர்வம் சற்று மட்டுப்பட்டது. தியடோர் பாஸ்கரனின் அழகிய சரளமான பத்தி மொழி எழுத்து எனக்கு மிகவும் பிடித்தது. கானுயிர் சார்ந்த தமிழ் எழுத்தில் முன்னோடியான அவரின் கானுயிர் நூல்கள் மகத்தானவை. தமிழ் திரைப்பட வரலாற்றில் அவர் அளவுக்கு மௌன படங்களையும் ஆரம்ப கால பேசும் படங்களையும் ஆராய்ந்தவர்கள் இல்லையென்றே நினைக்கிறேன். ராண்டார் கை சில நூல்களை எழுதியுள்ளார் என்பது தெரிந்தாலும், ராண்டார் கை சென்னையை மையமாகக் கொண்டே நிறைய எழுதியுள்ளார். தியடோர் பாஸ்கரனின் முக்கியமான அவதானிப்புகளில் ஒன்று திரைப்படம் மதச்சார்பற்ற கலை வடிவம் என்பது. இந்தியாவின் பாரம்பரிய கலைகள் கோயில் பண்பாட்டை ஒட்டியே இருந்ததால் அவை கலைகள் ஆயினும் மதத்தோடு கொண்ட தொடர்பு தவிர்க்க முடியாததாயிற...