Skip to main content

பறவைக்கு கூடுண்டு - அனைவருக்கும் வீடு - லாரி பேக்கரின் கனவு

கிண்டில் அன்லிமிடெட் இல் இருக்கும் நூல்களை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் போது இந்த நூல் கண்ணில் பட்டது. ஜெயமோகன் தளத்தில் இவரின் அறிமுகம் படித்தது நினைவில் வந்தது. எழுத்தாளர் பவா செல்லத்துரை திருவண்ணாமலையில் சில வீடுகளை பேக்கர் பாணியில் கட்டும் செய்திகளையும் படித்திருக்கிறேன்.  அவற்றினால் கிளர்ந்த ஆர்வத்தில் இம்மாத நூலாக பரிந்துரைத்தேன். 



புத்தகம் கௌதம் பாட்டியா லாரி பேக்கரைப் பற்றி எழுதிய நூலின் ஒரு பகுதியுடன் (முன்னுரை) தான் ஆரம்பிக்கிறது. லாரியின் மனைவி எலிசபெத் பேக்கரின் நினைவுக்குறிப்புகளே இந்த புத்தகமென்றாலும் லாரி தன் பாணி கட்டடக்கலைப் பற்றி எழுதியுள்ள விரிவான அறிமுகமும் இதில் உள்ளது.  ஓய்வு காலத்தில் தங்களுக்கு நினைவில் இருப்பதைச் சொல்கிறோம் என எலிசபெத் அறிமுகக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சிகளைக் கூட துல்லியமாக நினைவில் கொண்டு வந்துவிடுகிறார் (இருவருமே - தனது பர்மா சீன சாகசங்களை லாரியும் நினைவில் வைத்திருக்கிறார்) என்றே தோன்றியது. 

மருத்துவர் ஜீவானந்தத்தின் மொழிபெயர்ப்பு ஒழுகும் நீரோட்டத்தைப் போன்ற புத்தகத்தின் உள்ளடக்கத்தை அழகாக தமிழிலும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. 

இரண்டாம் உலகப்போரில் மருத்துவச் சேவைக்காக பர்மா/சீனாவுக்கு லாரி தனது க்வாக்கர் நண்பர்கள் குழுவின் சார்பில் வந்திருக்கிறார். அன்றைய பம்பாய் வழியே திரும்பிச் செல்ல காத்திருக்கும் போதுதான் காந்தியைச் சந்தித்திருக்கிறார். அவரில் மாற்றத்தை உண்டாக்கிய சந்திப்பு இதுதான். லாரி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைப் பற்றி எழுப்பும் கேள்விக்கு காந்தியின் அழகான பதில் “இந்தியர்களின் போராட்டம் பிரிட்டிஷ் அரசுடனேயன்றி, பிரிட்டிஷ் மக்களுடன் இல்லை. வெளியேற வேண்டியது அடிமைப்படுத்திச் சுரண்டும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களேயன்றி மக்கள் அல்ல”.  இந்தியாவுக்கு திரும்ப வர வேண்டும் என்ற எண்ணத்துடனேயே லாரி பிரிட்டனுக்கு கப்பலேறியிருக்கிறார்.

தொழுநோயாளிகள் சேவைக்குழுவுடன் மருத்துவமனைகளை வடிவமைத்து கட்டித்தர 1945இல் இந்தியா திரும்பி வருகிறார்.   தொழு நோய் மருத்துவமனைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், நிறுவனங்கள், நூலகங்கள் என தன் பாணியில் பேக்கர் வடிவமைத்து கட்டியுள்ளார். அவர் மகிழ்வுடனே கூறுவது “இறுதியாக எனது பணி வாழ்க்கையில் நிலை பேறாக நான் கண்டது இதுதான்: திட்டமிடுதலும் வடிவமைப்பதுமான இந்த முழுத் தொழிலானது களிப்பும் ஈர்ப்பும் நிறைந்த ஒன்றாக மாறி விட்டது

அவரின் பாணி உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்தே கட்டடங்களை எழுப்ப வேண்டும் என்பதுதான். “மக்கள் நலனுக்காகக் கட்டப்படும் கட்டிடங்கள் மக்களின் வாழ்வுச் சூழல், வசதி, இவற்றைப் பிரதிபலிப்பதாக அந்த அந்த இடங்களில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கட்டப்படுவது நல்லது எனும் காந்தியடிகளின் அறிவுரைக்கேற்பவே லாரி தன் கட்டிடங்களை வடிவமைத்தார்.

லாரிக்கு மருத்துவச் சேவையும் திருப்தியளித்திருக்கிறது. மனைவியுடன் மருத்துவ உதவியாளராகவும் மருத்துவமனை வடிவமைத்து கட்டுபவராகவும் இருந்திருக்கிறார். இமயமலையில் டீக்கடையில் முதல் மருத்துவமனை அமைத்தவர்கள் பிறகு கேரளா வாகாமோனில் மூடப்பட்ட டீத்தூள் உற்பத்திக் கட்டடத்தையே மருத்துவமனையாக மாற்றியிள்ளனர். மகனின் படிப்புக்காக திருவனந்தபுரத்திற்கு தற்காலிகமாகச் சென்றவர்கள் அங்கேயே நிரந்தரமாக வாழ்ந்தனர். திருவனந்தபுரத்தில் வாழ்ந்த காலத்தில் தான் பேக்கர் தன் புகழ் பெற்றக் கட்டடங்களை வடிவமைத்து கட்டியுள்ளார். கேரளத்தின் அப்போதைய முதலமைச்சர் அச்சுத மேனன் தான் லாரி பேக்கரை ஊக்கப்படுத்தி பல அரசாங்க நிறுவனக் கட்டடங்களை கட்ட ஊக்குவித்துள்ளார்.

பேக்கர் தனக்கென எந்த தனியார் நிறுவனத்தையுமே ஆரம்பிக்கவில்லை. அவருக்கு பிறகு பேக்கர் பாணி கட்டடங்கள் தனிப்பட்ட சிலரின் முயற்சியால் மட்டுமே கட்டப்படுகின்றன. மேலும், கேரளத்தின் Costford அரசாங்க நிறுவனம் அவரின் பாணியை முன்னெடுத்துச் செல்கிறது.  எலிசபெத் குறிப்பிடுவது “கடந்த சில ஆண்டுகளில் இதன் மூலம் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மாநிலம் முழுதும் கட்டப்பட்டுள்ளன. வீடுகள், பஞ்சாயத்துகள், மருத்துவமனைகள், சமூக அரங்குகள் ஏன் முழுமையான லாரி பேக்கர் மாதிரி கிராமங்களே கூட கட்டப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்பாளர் தமிழ் புத்தகத்தின் தலைப்பை எலிசபெத் கூறும் விவிலியத்திலின் கூற்றிலிருந்தே எடுத்துக்கொண்டிருக்கிறார். “பாம்பக்குப் புற்றுண்டு, பறவைக்குக் கூடுண்டு. மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை” என்ற விவிலியக் கனவை நனவாக்கும் மகத்தான லட்சியம் வடிவம் பெற்று வருவதைக் கண்டு லாரிபேக்கர் மன நிறைவு கொள்கிறார்.


ஆண்டின் இறுதியில் மனநிறைவளிக்கும் ஊக்கப்படுத்தும் நூலொன்றை படித்த நிறைவு உள்ளது. இந்த ஆண்டில் நான் படித்த இப்படியான இன்னொரு புத்தகம் Sometimes Brilliant. இந்தியாவிற்கு ஆன்மிகத்தேடலுக்காக வந்த மருத்துவர் லாரி பிரில்லியண்ட், இந்தியாவில் பெரியம்மை நோயை அகற்றுவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். அவரை ஊக்கப்படுத்தியவர் Neem Karoli Baba என்ற ஆன்மிக ஞானி.

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...