Skip to main content

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது.


குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள்.

குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர்.

17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன. 

குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழகான மேற்கோள்களும், கவித்துவமான உதாரணங்களும் அழகான உவமைகளும் புத்தகம் முழுக்க வந்தபடியே உள்ளன. 

சில அத்தியாயங்களை நிச்சயம் அடிக்கடி படிப்பேன். 

அன்பே உலகின் வலிமை அத்தியாயத்தில் மைனாக்குருவி ஒன்று மாமரக் கிளைகள் ஒவ்வொன்றிலாக அமர்ந்து அழகாகப் பாடி உலர்ந்த இலைகளை உதிர்த்து பட்டுப்போன்ற துளிர் இலைகளை தோன்றவைக்கும். மைனாவின் பாடலைக் கற்றுக்கொண்ட சிறுவர்கள் கிராமம் முழுக்கப் பாடி ஒவ்வொரு செடியிலும் நல்ல நல்ல அழகான பூக்கள் மணமான பூக்கள் என்று முடிக்கும் அழகே தனி.

வீட்டு நூலகம் அத்தியாயத்தில் அப்பா குழந்தைக்கு (குரு நித்யாதான் குழந்தை) சித்திர மேலட்டை கொண்ட அழகான புத்தகத்தையும், பொக்கிஷங்கள் என வீட்டு நூலகத்தையும் அறிமுகப்படுத்துகிறார். புத்தகத்திலிருந்து குழந்தையின் வாழ்க்கைக்குள் நுழைந்த முதல் வீரன் ஒரு நரி. குரு வீட்டில் நூலகத்தின் அவசியத்தையும் நூலகத்தில் புத்தகங்களை எப்படி வகைப்படுத்துவது என்றும் சில அவசியமான குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். இந்த அத்தியாயமே ஒரு பொக்கிஷம் தான். குழந்தைகள் படிக்க வேண்டிய முக்கியமான எழுத்தாளர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். 

எப்படி வாசிக்க வேண்டும் என்ற அத்தியாயத்தில் ஒரு நோட்டுப் புத்தகத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு தான் நீங்கள் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்றும் சில கேள்விகளை முன்னரே தயாரித்து வைத்துக்கொண்டு படிக்கும் போதே அந்த கேள்விகளுக்கும் துணை கேள்விகளுக்கும் விடைகளையும் எழுத வேண்டுமென குறிப்பிடுகிறார். பின்பு மறுபடியும் அவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டுமென்கிறார். எப்போதுமே பகுத்தறிவின் அடிப்படையில் நுட்பமாகச் சிந்தித்துக் கொண்டிருக்காமல் சிலசமயம் மனதுக்கு பாட்டு பாடி காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். அவரின் வரிகளை அப்படியே செல்ல வேண்டுமென்றால் “வாரத்துக்கு ஒரு முறையாவது நீண்ட நேரம் நம் புத்தகத் தோட்டத்தில் இலகுவான மன நிலையில் அமர்ந்து பெரியோர்களின் ஆத்மகீதத்தை அனுபவித்து மனம்பூக்க வேண்டும். அது நம் வாழ்க்கையை இனிமையாக்கும்.” உலகப் புகழ்பெற்ற சில சிறார் புத்தகங்களின் குறிப்புகளை கொடுத்ததோடல்லாமல் உலக சிறார் இலக்கியத்தில் புகழ் பெற்ற நூல்களின் பெயர்களையும் ஆசிரியர்களின் பெயர்களையும் கொடுத்திருக்கிறார். 

பிற அத்தியாயங்களை நீங்களே படித்து அறிந்து மகிழுங்கள். 

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...