Skip to main content

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது.

திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அவர் கூறிய உதாரணங்களில் ஒன்று

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.

இந்தக் குறளுக்கு மழை இல்லாமல் போனால் புல் இருக்காது என்பது போன்றே அனைவரும் உரை எழுதியிருக்கின்றனர். ஆனால் இதிலென்ன தரிசனம் இருக்கிறது? விசும்பு என்பது ஒரு பெருவெளியைக் குறிக்கும் சொல் என்றும் விளக்கினார். அவரின் விளக்கம் முழுமையாக நினைவில் இல்லை.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

இதில் எண் என்பதற்கு 1,2,3 போன்ற எண்களைத் தவிர முதலில் எண்ணம் பிறகுதான் எழுத்து என்ற பொருளும் கொள்ளலாம் என விளக்கினார். குருகு என்னும் பறவையைப் பற்றிய அவரின் விளக்கம் அழகாக இருந்தது. குருகு என்பது கொக்கு அல்ல அது வேறு ஒரு பறவை என்றார். மகன் அஜிதன் அவருக்கு விளக்கியதைக் (http://www.jeyamohan.in/?p=16748) குறிப்பிட்டார்.

தமிழில் ஒரு சொல் இல்லையென்றால் அந்தச் சொல் குறிக்கும் ஞானமே தமிழில் இல்லையென்றுதான் பொருள். Dolphin க்கு தமிழில் ஓங்கில் என்று பெயர். அந்தச் சொல் இல்லையென்றால் நமக்கு ஓங்கில்களைப் பற்றி தெரியாதென்றே பொருள். Dolphin என்று மட்டுமே நமக்குத் தெரிந்தால் அது மேற்கத்தியரின் ஞானம். நாம் இழப்பது சொல்லை மட்டுமல்ல அது சுட்டும் ஞானத்தையும் தான். வெண்முரசில் நீராளி (Octopus) பற்றி எழுதியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். சூழியல் அறிஞர் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு பற்றியும் விளக்கினார்.

சோழர்கள் கோயில்கள் கட்டியதையும் 12,000க்கும் மேற்பட்ட ஏரிகளை வெட்டியதைப் பற்றியும் பேசினார். வீராணம் ஏரியை ஒருமுறை நிச்சயம் நேரில் சென்று பாருங்கள் என்றார். கோயில்கள் மற்றும் ஏரிகளின் அருமை தெரியாமல் இருக்கிறோம் என்றார். சிற்பிகள் அமைத்த கோயில்களை கொத்தனார் கொண்டு புனரமைக்கிறோம் என்று வருந்தினார். பின்பு சிந்துச் சமவெளி நாகரிகம் பற்றியும் விளக்கினார். ஹரப்பா நகரத்தை விட பெரிய நகரங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார். சரஸ்வதி நதியைப் பற்றியும் லோத்தல் நகரத்தின் படகுத்துறையைப் பற்றியும் விளக்கினார்.

மறுநாள் நடந்த கலந்துரையாடலில் மகாபாரதம், விஷ்ணுபுரம், ஏழாம் உலகம் மற்றும் சிறுகதைகள் பற்றியக் கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளித்தார். கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஆமருவி தேவநாதன் கலந்துரையாடலின் காணொளியை இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளார்.

நான் ஜெயமோகன் அவர்களிடம் கேட்ட கேள்வி (அவரிடம் கேட்ட அதே வார்த்தைகளில் அல்ல),

நான் காஞ்சிபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். எனக்கு மகாபாரதம் என்பது இலக்கியமென்பதை விட கதை என்ற அளவிலேயே முக்கியமானது. கிராமங்களில் நடக்கும் தெருக்கூத்து மூலமாகவும், பாரதம் பாடுவதைக் கேட்பதன் வாயிலாகவுமே மகாபாரதம் அறிமுகமானது. அர்ச்சுனன் தபசுக்காக நடப்படும் பனை மரமும், படுகளத்திற்காக அமைக்கப்படும் துரியோதனின் பெரிய உருவமும் சிறு வயதில் பிரமாண்டமான அனுபவங்களையும் நல்ல தருணங்களையும் அளித்தது. (எங்கள் ஊரில் பாரதம் பாடுவதில் சுற்றுவட்டாரத்தில் புகழ்பெற்ற அண்ணாமலை முதலியார் மற்றும் கிருஷ்ணமூர்த்தி முதலியார் என இருவர் இருந்தனர். அவர்களுக்குப் பிறகு யாருமில்லை. என் பள்ளித்தோழன் கேசவன் அவனின் தாத்தா சொன்னதாக சில பாரத நிகழ்ச்சிகளை எங்களுக்குச் சொல்லியிருக்கிறான்.) பீஷ்மரின் வல்லமைக்குக் காரணம் அவர் ஒரு கந்தர்வன் என்பதும், சாபத்தால் கங்கையின் மைந்தனாகப் பிறந்ததாலும்தான் என்பதே. ஆனால் நீங்கள் அவர் ஒரு பழங்குடியினத்தவர் என்று சித்தரித்திருப்பதை கதையாக அணுகும், கதையின் அற்புதக் கணங்களுக்காக வாசிக்கும் நான் எப்படி அணுக வேண்டுமென்பதே.

என்னுடைய கேள்வியும் அவரின் விளக்கமான பதிலும் இந்தக் காணொளியில் நேரம் 1:06:05 இல் ஆரம்பிக்கிறது. http://www.youtube.com/watch?v=J50qpK_iQxY#t=3968

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...