Skip to main content

மெய்வருத்தம் பாரார்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

இந்த குறளுக்கு நமக்கு பொருள் தெரியும். துணிந்தபின் எண்ணுவேன் என்பது இழுக்கு, பின் வேறென்ன செய்ய வேண்டும்?

திருக்குறள் மனிதன் அறத்தோடு வாழ வழி சொன்ன தொன்மையான நூல். தமிழில் திருக்குறளின் தொடர்ச்சியான நூலாக 17 ஆம் நூற்றாண்டில் குமரகுருபரரால் எழுதப்பட்ட நீதிநெறிவிளக்கம் கருதப்படுகிறது. அறத்தின் பாற்பட்ட வாழ்வின் அடிப்படைகளை விளக்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத வரும் ஒவ்வொருவரும் தன் முன்னோடிகளின் நூல்களை ஐயந்திரிபுற கற்றிருக்க வேண்டும். குமரகுருபரர் தன்னை தமிழின் நீண்ட இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவே நிலைநிறுத்துகிறார்.

கல்வியின் பயனும் சிறப்பும், கல்வியின்பம், கல்விச்செல்வம், புலவர் பெருமை, கற்றன மறவாமை, கல்வியழகே அழகு, பெரியோர் பணிவு, கற்றபடி நிற்றல், மேன்மக்கள் பெருமை, இறைமாட்சி, ஈகை, கருமமே கண்ணாயினார் போன்ற தலைப்புகளில் இன்னிசை வெண்பாக்களாக இயற்றியுள்ளார். ஏறக்குறைய திருக்குறளின் அதிகாரங்களையே நினைவுபடுத்தும்.

அதில் ஒரு வெண்பா

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.

இப்போது முதல் பத்திக்கு வருவோம்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

------ துணிந்த பிறகு.....

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

எனக்கு பிடித்த இன்னொரு வெண்பா, நிலையாமையைப் பற்றியது.

நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.

( நீரில் தோன்றி சட்டென மறையும் குமிழி போன்றது இளமை, அலைகள் போல வந்து வந்து போகும் பொருட்செல்வம், நீரில் எழுதிய எழுத்துபோல் அழிந்துபோம் உடல். நம்மவர்களே, வாழ்க்கை இப்படியிருக்க இறைவனை வாழ்த்தாதது ஏன்?)

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...