எழுத்தாளர் கிராவின் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், மறைவாய் சொன்ன கதைகள், கிடை (குறுநாவல்), மாயமான் தொகுப்பில் சில கதைகள் மற்றும் கி.ராஜநாரயணன் கதைகள் தொகுப்பில் சில கதைகள் என வாசித்திருக்கிறேன். புதுவை இளவேனில் தொகுத்த உயிர்க்கோடுகள் நூலின் சில பகுதிகளை கிராவின் எழுத்துக்காகவும் ஓவியர் ஆதிமூலத்தின் அழகான கோட்டோவியங்களுக்காவும் படித்திருக்கிறேன்.
கோபல்ல கிராமம் நாவலை முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு வாசித்தேன். நான் வாசித்த கிராவின் முதல் நூல் அது. அனைவரையும் போல அழகான வட்டார எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது வாசிக்கும் போது புதிய சில தெளிவுகள் கிடைத்தன.
விடியலை இரவு உயிர்களை முன்வைத்து சொல்லியிருப்பதே அழகாயிருந்தது (இரவு தூங்க ஆரம்பித்துப் பகல் விழிக்கப் போகும் நேரம்.)
பசு / எருமை, தென்னை/பனை போன்றவற்றை பிரம்மா விஸ்வாமித்திரனை முன்வைத்து கிரா எழுதியிருப்பது
//போட்டி உலகத்தை உண்டாக்கிய விஸ்வாமித்திரன்தான் பசுமாடுகளுக்குப் போட்டியாக எருமை மாடுகளையும், தென்னைமரத்துக்குப் போட்டியாக பனை மரத்தையும், மூஞ்சூறுக்குப் போட்டியாக பெருச்சாளியையும் உண்டாக்கியதாக அக்கையா சொல்லுவார்!//
ஜெயமோகனின் ”தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்” தொகுப்பில் (இரண்டு கதையுலகங்கள்) வேறு புராணக்கதைகளை முன்வைத்து (காராம்) பசு / எருமை, தென்னை/பனை போன்றவற்றின் தோற்றங்களை எழுதியிருப்பார். எவ்வளவு கதைகள்!!
காயடி கொண்டய்யா பற்றிய விவரணையில் அவர் செய்வதன் முக்கியத்துவம் பெருமாள் முருகனின் பூனாச்சி நாவலை படித்தபிறகு நன்றாகப் புரிகிறது. ஏறக்குறைய சில பக்கங்களுக்கு பூனாச்சியில் இதைப்பற்றிய விவரணை உண்டு.
கடந்த ஜூன் 25 ஆம் தேதி Clubhouse இல் வரலாற்றின் மூலங்கள் என்ற தலைப்பில் உரையாடல் ஒன்று நடந்தது. எவற்றை வரலாற்றின் மூலங்களாகக் கருதலாம் மற்றும் ஒரு வரலாற்று நிகழ்வின் தரவுகளைப் பதிவு செய்தாலும் அதன் உணர்வு பூர்வமான விளைவுகளைப் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்களும் பேசப்பட்டன. வரலாற்றுப் புனைவு அம்மாதிரி உணர்வுகளைப் பதிவு செய்ய சிறந்த கருவியென விவாதிக்கப்பட்டது. அம்மாதிரி சில தகவல்களும் இந்நாவலில் உள்ளன.
இந்த நாவலில் சில குறிப்புகள் 18ஆம் நூற்றாண்டின் சித்திரத்தை அளிக்கின்றன. அனைவரும் குறிப்பிடுவது, 18 ஆம் நூற்றாண்டில் கொலையும் கொள்ளையுமாகத்தான் தமிழகம் இருந்திருக்கிறது.
இந்த நாவலில் “நமக்கு இப்பொ ராஜாங்கம்ண்ணு ஒண்ணு இல்லை; நமக்கு இப்பொ ராஜாங்கம் நாமதான்”. கிழக்கிந்திய கம்பெனி (கும்பினி) முழுமையாக அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை இந்த நிலை தொடர்ந்திருக்கிறது. இதன் காரணமாகவே ஆரம்பத்தில் கம்பெனி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். கிராமத்தாருக்கு மங்கத்தாயாருவின் விளக்கமும் கம்பெனி ஆட்சியை ஏற்றுக்கொள்ள இன்னுமொரு காரணம்.
பிறகு ஆங்கிலேயர்களின் கொடுமை அதிகரிக்க, அவர்களை விரட்ட வேப்பிலையை வீட்டுக்கு வீடு சொருகி வைப்பது (பெரியம்மை) ஒரு தந்திரமாக நீண்ட காலம் இருந்திருக்கிறது. ஊமைத்துரையை வெள்ளையரிடம் இருந்து காக்க இந்த முறையை பின்பற்றியிருக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன்.
தமிழகத்தில் விட்டில் பூச்சியால் ஏற்பட்ட பஞ்சம் பற்றி ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா என்று தெரியவில்லை. சென்ற சில ஆண்டுகளில் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் பெரும் பிரச்சனையாக விட்டில் பூச்சிகள் இருந்திருக்கின்றன.
சில விவரணைகளை இப்போது படிக்கும் போது எனக்கு வேறு சில தனிப்பட்ட நினைவுகள் வந்தன.
//உட்கார்ந்திருக்கும் அந்த அரசமரம் கோட்டையார் வீட்டு மங்கத்தாயாரம்மாவின் மாப்பிள்ளை கொண்டையாவால் நட்டு வளர்க்கப்பட்டது. அதற்கடுத்துள்ள அத்திமரம் நுன்னகொண்ட வெங்கடப்பய்யாவின் முன்னோர் நுன்னகொண்ட ஸ்ரீ ரெங்கய்யா வைத்தது.//
இம்மாதிரி ஒரு நினைவு எனக்குண்டு. எங்கள் அழகப்பா பொறியியல் கல்லூரியில் உள்ள சாலையில் பக்கத்துக்கு ஒன்றாக அரசமரம் உள்ளது. ஒரு மரத்தை நேருவும் இன்னொரு மரத்தை ராஜேந்திர பிரசாத்தும் நட்டனர் என போர்டில் வரைந்து வைத்துள்ளனர்.
//எங்க்கட்ராயலுவுக்குப் பக்கத்தில் அவருடைய தம்பி சின்ன எங்க்கட்ராயலு உட்கார்ந்திருக்கிறார்.//
இதே மாதிரி எங்கள் குடும்பத்திலேயே ஒரு கதை உள்ளது. என் பூட்டனார் வெங்கடாசலத்துக்கு இரு மகன்கள். முதல் மகனின் பேரன் நான். இரண்டாம் மகனின் பேரன் பெயரும் வெங்கடாசலம். என்னை விட நான்கு மாதங்கள் மூத்தவன் அவன். குடும்பத்தில் அவனை வெங்குடு என்றும் என்னை புது வீட்டு வெங்குடு என்றும் அழைப்பார்கள். நண்பர்கள் மத்தியில் அவனை லெஃப்ட் (இடக்கை பழக்கத்தால்) என்றும் என்னை வெங்குடு என்றும் அழைப்பர்.
//மண்கலயத்தை உடைத்துப் பகிர்ந்து கொடுத்தாராம்! அதிலிருந்து ஜனங்கள் அவரைப் படுபாவி செங்கன்னா//
எங்கள் குடும்பத்திலும் பூட்டனாரின் சாப்பாட்டுத் தட்டை இரண்டாக வெட்டி பங்கு போட்டுக்கொண்டனராம். அவரின் உத்திராட்ச மாலையையும் இரண்டாக வெட்டி உத்திராட்சங்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்த நாவல் அளவுக்கு கோபல்ல கிராமத்து மக்கள் நாவல் நினைவில் இல்லை. சுபமங்களா இதழில் (டிசம்பர் 1991) வெளிவந்த நேர்காணலில் (https://www.subamangala.in/archives/199112/#p=6) கிராவின் பதில்
’கோபல்ல கிராமம்’ பேசப்பட்ட அளவிற்கு அந்த நாவலின் அடுத்த பகுதியான ’கோபல்ல கிராமத்து மக்கள்’ எடுபடவில்லையே ஏன்?
’கோபல்ல கிராமம்’ நாவலை எழுதி முடிச்சி கொஞ்சம் கொஞ்சமாய் செதுக்கி செழுமைப்படுத்தினேன். கயத்தாறு ஆசாரி வண்டி செய்யறமாதிரி நிதானமா செய்தேன். ’கோபல்ல கிராமத்து மக்கள்’ பத்திரிகைக்கு தீனிபோடுகிற வேகத்தில் எழுதியது. அவசரமா பண்ணியது.
கிடை குறு நாவலின் முதல் பதிப்பு 1968 என்றும் கோபல்ல கிராமத்தின் முதல் பதிப்பு 1976 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிடை நாவலும் கிராமத்தின் பஞ்சாயத்து, பல்வேறு மனிதர்களின் குணாதிசயங்கள் என்றே இருக்கிறது. ஆனால் கோபல்ல கிராமம் முதலில் படித்ததால் அவ்வளவாக ஈர்க்கவில்லை.
பேதை, கதவு மற்றும் கன்னிமை போன்ற சிறுகதைகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. கன்னிப் பருவத்தில் வாரி வழங்கும் ஒரு பெண் திருமணமாகி எப்படி ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குப் பார்க்கும் பெண்மணியாக மாறுகிறார் என்பதை அழகாக எழுதியிருப்பார்.
Comments