Skip to main content

அழகர் கோயில் மற்றும் அறியப்படாத தமிழகம்

  நாட்டாரியல் ஆய்வாளர் தொ.பரமசிவனின் அறியப்படாத தமிழகம் புத்தகத்தின் சில பகுதிகளை முன்பே படித்திருக்கிறேன். பண்படுதல் குழும வாசிப்புக்காக அறியப்படாத தமிழகம் மற்றும் அழகர் கோயில் புத்தகங்களை இப்போது படித்தேன்.



ஏற்கனவே திரு அ.கா.பெருமாளின் ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் நூலை முழுமையாகவும் சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம் நூலின் சில பகுதிகளையும் படித்திருக்கிறேன். திரு.அ.கா.பெருமாளின் சில நாட்டாரியல் ஆய்வு நூல்களையும் படித்திருக்கிறேன். அவற்றை வாசிப்பது எப்போதும் மகிழ்ச்சியையும் பால்ய காலத்தின் நினைவுகளையும் தூண்டும். கிராமத்தின் எல்லாத்திசைகளிலும் ஏரி, ஏரிக்கொரு காவல் தெய்வமென்னும் ஊரில் பிறந்து வளர்ந்ததால் இருக்கும்.

இரண்டில் எனக்கு பிடித்த நூல் அழகர் கோயில் தான். சங்க காலத்திலிருந்து இன்று வரை வாழும் ஆலயத்தை மையமாகக் கொண்ட கதைகள், வரலாற்று சம்பவங்கள் என ஏராளமான தகவல்களைத் திரட்டி தொகுத்தளித்திருக்கிறார்.  காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப் பெருமாள் (தேவராஜர், அத்தி வரதர், கரி வரதர் என்ற பெயர்களுமுண்டு) சித்திரை பௌர்ணமியில் தெற்கு நோக்கி ஏறக்குறைய பத்து கிராமங்களுக்கு வந்து, எங்களூரில் சிறப்பு பூஜை முடிந்து, நடபாவி கிணற்றில் இறங்கி, பின்பு பாலாற்றில் தங்கி காஞ்சிபுரம் திரும்புவார். அதே மாதிரி பார் வேட்டைக்காக ஏறக்குறைய 30 கிமீ தூரத்திலிருக்கும் பழைய சீவரத்துக்கும் (பாலாறு, வேகவதி மற்றும் செய்யாறு கலக்கும் இடத்துக்கு அருகில்) செல்வார். 

வரதர் எங்களூருக்கு வர ஒரு தொகையை கட்டணமாக ஊரார் கோயிலுக்குச் செலுத்த வேண்டும். ஆனால், லட்சுமிகுமார தாத்தாச்சாரியார் 16 ஆம் நூற்றாண்டில் வெட்டிய 130 ஏக்கர் குளத்துக்கு நீர் தரும் கால்வாயை மாமண்டூர் ஏரிக்கு திருப்ப ஒரு காலத்தில் இரு கிராமத்துக்கும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறது. அதற்கு பதிலாக மாமண்டூர் கிராமமே ஆண்டு தோறும் இந்த தொகையை காஞ்சிபுரம் வரதர் கோயிலுக்கு ஐயங்கார்குளம் (அரசு ஆவணங்களில் அய்யங்கார்குளம்) சார்பாக செலுத்தி விடுகிறது. ஐயங்கார்குளம் என்ற பெயரே அந்த 130 ஏக்கர் குளத்தால் வந்ததுதான். 

இம்மாதிரி ஏகப்பட்ட கதைகளும் வரலாற்றுத் தகவல்களும் அழகர் கோயிலுக்கும் உண்டு, பரிபாடலில் ஆரம்பித்து சென்ற நூற்றாண்டு வர்ணிப்புப் பாடல்கள் வரை.

தனித்தனி திருவிழாக்களாக இருந்த மாசி மாத மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விழாவை சித்திரைக்கும் தேனூர் வரை மட்டுமே வந்த கள்ளழகரை மதுரை வரை வரவழைத்தது திருமலை நாயக்கர் தான். அழகான கதை இது. கள்ளழகரின் மதுரைப் பயணத்தை ஒவ்வொரு நாளாக விரிவாக விவரித்துள்ளார். ஏறக்குறைய 300+ இடங்களில் (திருக்கண்கள்) அழகர் நின்று காட்சி அளிக்கிறார். சித்திரைத் திருவிழாவில் திரி ஏந்துபவர், துருத்தி நீர் தெளிப்பவர், அவர்கள் அணியும் ஆடை என எவ்வளவு அழகான தகவல்கள். சில ஒளித்துண்டுகளில் youtube-இல் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். 1978/79 களில் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 2018இலும் (youtube-இல் பார்த்த விழாவின் ஆண்டு) இவை தொடர்கின்றன.

கள்ளழகர் கோயிலின் பிற திருவிழாக்களைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். கோயிலுடன் உறவு கொண்டுள்ள சாதிக்களைப் பற்றியும் அவர்களின் பங்களிப்புகள், சடங்குகள் என மிக விரிவான தகவல்களைச் சேகரித்துள்ளார். கோயில்களின் பணிபுரிபவர்களைப் (வைகானசர், பாஞ்சராத்ரர், அவர்களின் நம்பிக்கைகள், பொறுப்புகள்) பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.

பதினெட்டாம்படி கருப்பரைப் பற்றியும் தனி அத்தியாயமாகவே எழுதியுள்ளார். கருப்பர்/சுடலை மாடனின் வைணவ /சைவ தொடர்புகளும் நான் புதிதாக அறிந்து கொண்டவை.

ஆண்டாள் படைப்பதாகச் சொன்னதை ராமானுஜர் செய்ததால் அவர் ஆண்டாளின் அண்ணணாகியிருக்கிறார் (கோயிலண்ணர்).

இந்திர வழிபாடு, பலராம வழிபாடு, பௌத்த கோயில் போன்றவற்றைப் பற்றி உறுதியான தரவுகள் இல்லை என்றே தோன்றுகிறது. 

அறியப்படாத தமிழகம் நூல் படிக்க சுவாரசியமாகவே இருந்தது. இலக்கியம், கல்வெட்டுகள், கிராம பழக்க வழக்கங்கள் என பல்வேறு தரவுகளின் அடிப்படையில் தமிழ் வாழ்வின் கூறுகளை விளக்குகிறார். விரிவாக இன்னொரு சமயம் எழுத வேண்டும். நம் வாழ்வின் சாதாரண பழக்க வழக்கங்களுக்கு பல நூற்றாண்டு தொடர்ச்சியுள்ளது. 

தொ.பா அறியப்படாத தமிழக நூலின் முன்னுரையில் “தமிழகத்தின் தென் மாவட்டங்கள்தாம் என் வளர்ப்புக்கும் கல்விக்கும் வாழ்வுக்கும் பட்டறிவுக்கும் எல்லையாகும்.” என்று குறிப்பிடுகிறார். தென் தமிழகத்தில் (திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி) தான் எத்தனை சிறுதெய்வங்கள், கோயில்கள், கலைகள். சற்று பொறாமையாகவே உள்ளது. தண்ணீரின் உண்மையான பொரும் (தண் + நீர் => குளிர்ந்த நீர்), நீர்நிலைகளின் பெயர்காரணங்கள், பக்தி இயக்கத்துக்கும் முந்தைய திருவிழாக்கள் (திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், மாசிக்களரி, திருவாதிரை, தைப்பூசம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம் மற்றும் ஆடிப்பதினெட்டு), பக்தி இயக்க காலகட்டத்தில்  நடந்த உணவு மாற்றங்கள் என சுவையான தகவல்கள்

இரண்டு நூல்களையும் தொ.பா வின் அழகான தமிழில் படித்ததற்கு அவர் மேற்கோள் காட்டியிருக்கும் குமரகுருபரரின் அழகான வரிகளோடே முடிக்கலாம்.

தலைப் பாவலர் தீஞ்சுவைக் கனியும் தண் தேன் நறையும் வடித்தெடுத்த சாரம் கனிந்தூற்றிருந்த பசுந்தமிழ்

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...