Skip to main content

Mauve - How One Man Invented a Color That Changed the World

நண்பர்களுக்கு வணக்கம். என் பெயர் வெங்கடாசலம். நான் Popular science எனும் வகைமையைச் சார்ந்த Mauve எனும் புத்தகத்தை அண்மையில் படித்தேன். புத்தகத்தைப் பற்றிய சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். முதன்மையாக இது ஒரு வாழக்கை வரலாற்று நூல். William Perkin எனும் வேதியியல் விஞ்ஞானியின் வாழ்க்கை, அவரின் கண்டுபிடிப்பு மற்றும் அதனால் தொழிற்துறையிலும் அறிவியல் துறையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் தான் புத்தகத்தின் சாரம்.

முதலில் William Perkin பற்றியும் அவர் எவ்வாறு இந்த கண்டுபிடிப்பை நோக்கிச் சென்றார் என்றும் பார்ப்போம்.

William Perkin 1838 இல் பிறந்தார். அவர் தந்தை தச்சுத்தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பெர்கினுக்கு இளைய வயதில் நிறைய விஷயங்களில் ஆர்வம் இருந்தது. வேதியியல் ஆர்வம் பின்னாட்களில் தான் வந்தது. ஆனால், அவரின் தாத்தா ரசவாதி என பெயர் பெற்றிருந்தார்.

இப்போது அக்காலத்தில் இருந்த அறிவியல் தேவைகளையும் பிற முன்னேற்பாடுகளைப் பற்றியும் சில வார்த்தைகள்.

19ஆம் நூற்றண்டில் வெப்பமண்டல காலனிய நாடுகளில் இருந்த ஆங்கில சிப்பாய்கள் நிறைய பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். அப்போது சிங்கோனா மரப்பட்டையில் இருந்து எடுக்கப்படும் கொய்னா ( சரியான ஆங்கில உச்சரிப்பு கொய்னயின்) மருந்து தான் உபயோகப்படுத்தப்பட்டது. சிங்கோனா தென்னமரிக்க நாடுகளான பெரு, பொலிவியா போன்றவற்றில் வளரும் மரம். இந்த மருந்து தேவையான அளவுகளில் கிடைப்பது அரிதாக இருந்தது. அதன் விலையும் அதிகமாக இருந்தது. செயற்கை முறையில் மருந்து தயாரிப்பதில் பலர் ஈடுபட்டிருந்தனர்.

அடுத்து இங்கிலாந்தில் வேதியியல் வளர்ந்த கதை.

ஆங்கிலேயர்கள் அடிப்படையில் வணிகத்தில் நிறைய ஈடுபாடு கொண்டவர்கள். ஓய்வு பெற்ற இந்திய ICS/IAS அதிகாரிகளைக் கேட்டால் ஆங்கிலேயர்கள் வணிகர்கள் மட்டுமே என்பார்கள். 1837 ஆம் ஆண்டு ஜெர்மனிய விஞ்ஞானி யொஸ்டஸ் லீபிக் இங்கிலாந்து அறிவியலுக்கான தேசமல்ல என்று ஜெர்மனி-இங்கிலாந்து கூட்டுக் கூட்டத்தில் அறிவித்தார். ஏனெனில், வேதியியல் பரிசோதனைக்கூடத்தில் தான் பயிலப்படவேண்டுமென்பதே இங்கிலாந்துக்கு புதியது. ஆனால் ஜெர்மனியில் நிறைய பல்கலைக்கழகங்கள் முறையாக வேதியியலைப் பயிற்றுவித்தன. William Perkin பிறக்கும் போது வேதியியல் பயிற்றுவிக்கும் கல்லூரி ஒன்றுகூட இங்கிலாந்தில் இல்லை. 1840களில் தான் வேதியியல் கல்லூரி லண்டனில் தொடங்கப்பட்டது.

அடுத்து இங்கிலாந்தில் நிலவிய சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனையைப் பற்றிப் பார்ப்போம்.

நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் வாயுவில் தான் லண்டன் நகரின் விளக்குகள் ஒளிர்ந்தன. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே நிலக்கரி வாயு இதற்காக உபயோகப்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கான டன் நிலக்கரி உபயோகப்படுத்தப்பட இந்த செயல் முறையில் அபாயகரமான அசுத்தமான நீர், கந்தகம் மற்றும் திரவ தார் (கீல்) கழிவுகளாக வெளியேற்றப்பட்டன. இவை நீரில் கலந்ததால் நீர் நிலைகள் மாசடைந்தன, மீன்கள் இறந்தன. இவற்றை கழிவுகளாக வெளியேற்றாமல் உபயோகப்படுத்த முடியுமா என ஆராய்ந்து கொண்டிருந்தனர். கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் கந்தகம் ஆகியவற்றின் கலவைதான் இந்த திரவ தார்.

இந்த நேரத்தில் லண்டன் ராயல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த ஆகஸ்ட் ஹாஃப்மன் தாரிலிருந்து கொய்னயின் தயாரிப்பது பற்றிய ஓர் அறிவியல் கொள்கையை வெளியிட்டார். சில ஆண்டுகள் கழித்து கல்லூரியில் சேர்ந்த பெர்கினுக்கு ஹாஃப்மன் தான் கல்லூரி ஆசிரியாராக இருந்தார். பெர்கினின் ஆர்வத்தையும் திறமையையும் கண்டு தன் உதவியாளாராகவே ஆக்கிக்கொண்டார்.

பெர்கின் தன் வீட்டு எளிமையான பரிசோதனைக் கூடத்தில் கொய்னயின் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நிறமில்லாத கொய்னயின் தயாரிக்கும் முறையில் ஒரு சிவப்பு நிறப் பொடி ஒன்று கிடைத்தது. அதை மேலும் ஆராய்ந்து தூய்மைப்படுத்தியதில் இள ஊதா நிற சாயம் கிடைத்தது. இதன் வணிக சாத்தியங்கள் புரிந்ததில் செயற்கை சாயம் தயாரிக்கும் ஆலை அமைத்து மதிப்பு மிக்க தொழிலதிபரானார். 18 வயதில் தன் தந்தை மற்றும் தமையனின் துணையுடன் தொழிற்சாலையைத் தொடங்கினார். மூலப்பொருளின் 5 சதவீதமே உள்ள இந்த நிறத்தைப் பிரித்தெடுத்தது பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

காப்புரிமைச் சட்டங்கள் பெரிதும் இல்லாத அக்காலத்தில் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகள் வேறு செயற்கை வண்ணங்களை உருவாக்கினர். பெர்கினும் அடர் நீலம், பிரிட்டானியா வயலெட் போன்று வேறு நிறங்களை உருவாக்கினார். விக்டோரியா மகாராணியும் பிரான்ஸ் மகாராணி யுஜெனியும் பெர்கினின் நிறத்தை அன்றைய மேற்கு உலகத்தின் மோஸ்தராக்கினர். பெர்கின் என்ன நிறங்களை உருவாக்குகிறார் என்பது அவர் தொழிற்சாலையின் அருகில் ஓடும் Grand Junction கால்வாயில் ஓடும் நிறத்தைப்பார்த்தால் தெரியுமாம். செயற்கை நிறங்கள் அன்றைய ஆடை நாகரிகத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. பின்னாட்களில் வாசனைத்திரவியங்களையும் உருவாக்கினார்.

செயற்கை நிறங்களைக் கண்டுபிடித்தது தான் அவரது சாதனையா? அடிப்படையான முன்னேற்றம் என்னவென்றால், வணிக மனப்பான்மை கொண்ட அனைவருக்கும் அறிவியல் மூலமும் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஊக்கம் கிடைத்தது. ஏகப்பட்ட தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இந்த ரசாயனத் தொழிற்சாலைகளால் நிறைய சுற்றுச்சூழல் மாசு பட்டன. பெர்கினும் 1873 இல் தன் நிறுவனத்தை விற்றுவிட்டு ஆராய்ச்சிக்கே திரும்பிவிட்டார். ஒரு நாட்டில் தொடங்கப்பட்ட ஒரு சிறு நிறுவனம் உலகம் முழுக்க ரசாயனம் சார்ந்த தொழிற்சாலைகள் தொடங்க ஊக்குவித்தது.

அவை வெறும் நிறங்கள் மட்டுமல்ல. பெர்கினின் கண்டுபிடிப்பு நோயாளிகளை குணப்படுத்த உதவியது.

1. ஜெர்மனின் பால் யலிட்ஷ் நிலக்கரி தாரிலிருந்து புற்று நோய் சிகிச்சை மருந்தான கீமோதெரபி மருந்தைப் பிரித்தெடுத்தார்.

2. நுண்ணுயிரிகளைப் பிரித்து பார்க்க இந்தச் சாயங்கள் பெரும் உதவி புரிந்தன. காச நோயை ஏற்படுத்தும் பாக்டிரியாவை இம்முறையில் தான் கண்டுபிடித்தனர்.

3. சாக்கரின் (செயற்கை இனிப்பு) இனிப்பும் நிலக்கரி தாரிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது.

4. உணவைப் பதப்படுத்த பயன்படும் அமிலங்களும் அதே முறையில் பிரித்தெடுக்கப்பட்டவைதான். இன்றைய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பெரும்பாலான உணவு பதப்படுத்தப்பட்டவை தான்.

5. இன்றைக்கு நடைமுறையில் ஏறக்குறைய இல்லையென்றாலும் புகைப்ப்ட சுருள்கள் மற்றும் வண்ணப்புகைப்படங்களுக்கும் நிலக்கரி தார் பயன்பட்டன.

6. உலகின் சிறந்த வலி நிவாரணியான ஆஸ்பிரினும் அம்மாதிரியான சாயக்கலவையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது தான்.

7. DNA, Chromosome போன்றவற்றை இந்தச் சாயங்களைக் கொண்டுதான் கண்டுபிடித்து ஆராய்ந்தனர்.

8. சில வண்ணச்சாயங்கள் நுண்ணுயிரிகளை எதிர்க்கும் குணத்தைப் பெற்றிருந்தன. அதைக்கொண்டுதான் ஜெர்மனியின் ஜெர்ஹார்ட் டொமஹாக் சல்ஃபா எனும் முதல் Anti Biotic மருந்தைக் கண்டுபிடித்தார்.

9. இன்றைய மருத்துவத்தில் CT Scan எடுக்கும் முறைகளில் Contrast என்ற ஒரு முறை உண்டு. நிறமில்லாத சாயத்தை உடலினுள் ஊசி மூலம் செலுத்தி உடனே CT Scan எடுப்பார்கள். உடலுறுப்புகள் ஒளி பெற்று தெளிவாகத் தெரியும்.

இந்த புத்தகம் பெர்கின் இறந்து நூறாண்டுகளுக்குப் பிறகுதான் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் சைமன் கார்ஃபீல்டு ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளர் போல இந்த புத்தகத்துக்காகத் தேடித்தேடி தகவல்களைச் சேகரித்துள்ளார். அறிவியலுடன் சேர்ந்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை முடிந்த வரை தெளிவாக எழுதியுள்ளார். சைமன் கார்ஃபீல்டு அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளர். 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் கிண்டில் அன்லிமிடெட் இல் இலவசமாக படிக்கக் கிடைக்கிறது.

புத்தகத்தின் தலைப்பு Mauve - How One Man Invented a Color That Changed the World

அனைவருக்கும் நன்றி.

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...