வரலாற்றுப் புத்தகங்கள் தரும் வாசிப்பின்பம் அதிகம்தான். ஏறக்குறைய கால யந்திரத்தில் பயணிப்பதைப் போலத்தான். திருநெல்வேலியைப் பற்றி சங்க காலத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டம் வரை ஏறக்குறையத் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான காலகட்டத்தில் தமிழருக்கும் இந்தியருக்கும் இம்மாதிரியான வரலாற்று நூல் பெரும் ஆச்சரியத்தை அளித்திருக்கும். தமிழ்நாட்டைப் பற்றி மட்டுமல்லாமல் ஓரளவிற்கு தென்னிந்தியா பற்றியும் நிறைய தகவல்களை சேகரித்து எழுதியுள்ளார். அவருக்கு பிற நூல்களும் கடிதங்களும் தான் முக்கியமான ஆதாரமாக இருந்திருக்கிறது. 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சில தகவல்கள் பிற்கால ஆய்வுகளால் மாறியிருக்கின்றன.
ந.சஞ்சீவி படிக்க சுவாரசியமாகவே இதைத் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அநேக இடங்களில் அடைப்புக்குறிக்குள் அவரின் கருத்தை எழுதியிருப்பது சற்று ஆயாசமாக இருக்கிறது. பாளையக்காரர்களின் போர்களைப்பற்றிய இடங்களில் ஏறக்குறைய விளையாட்டு வர்ணனை அளவுக்கு இந்த அடைப்புக்குறி கருத்துகள் இருக்கின்றன. அதுவும் அவரின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்த கருத்துகள் இருக்கின்றன. அவரின் மொழிபெயர்ப்பின் தரத்தை அவரே இக்கருத்துகளால் குறைத்திருக்கிறார். இன்னொமொரு குறை அவன்/அவர் என நிறைய இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் இருக்கும் சூழலில் குறிப்பிடுவது குழப்பத்தைத் தருகிறது. ஆங்கிலத்திலும் இப்படி இருந்திருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது. அவன்/அவர் என விளிப்பதும் மொழிபெயர்ப்பாளரின் சீற்றத்துக்கும் (அடே வெள்ளையனே) அரசியல் நிலைக்குமேற்ப மாறியிருக்கிறது என்றே நினைக்கிறேன். மேற்சொன்ன சில குறைகள் இருந்தாலும் இம்மாதிரியொரு நூலை மொழிபெயர்த்தவருக்கு நன்றிகளும் வணக்கங்களும்.
இந்த நூலைப் படிக்கும் போது இரண்டு நூல்கள் அடிக்கடி நினைவில் வந்து சென்றன. ஒன்று கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம். இன்னொன்று சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்.
கோபல்ல கிராமத்தில் கும்பினியார் (கிழக்கிந்திய கம்பெனி) நடமாட்டம் ஆரம்பிக்கும் போது மங்கத்தாயாரு அம்மாவிடம் என்ன செய்யலாம் என்று கேட்கும்போது அவர் ஒரு கேள்விதான் கேட்பார்.
”எங்கியாவது அவன் இந்த துலுக்க ராஜாக்களைப் போல நம்ம பெண்டுகளுக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்திருக்கானா?”
இல்லையென்றவுடன், அவன் இந்த பூமியையும் நன்றாகவே பரிபாலணம் பண்ணுவான் என்றாள் மங்கத்தாயாரு அம்மாள் என முடியும்.
மேலும் மங்கம்மா சாலையில் அடிக்கடி வெள்ளையர் நடமாட்டம் பற்றியும் நாவலில் குறிப்புகள் இருக்கும். இந்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். ராணி மங்கம்மா சாலைகள் அமைத்ததைப் பற்றியும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.
”இவள் நாடெங்கும் சாலைகளை அமைத்தாள். சாலையின் இருமருங்கிலும் நிழல் தரும் மரங்களை நடச் செய்தாள். கிணறுகளை வெட்டுவித்தாள்; சத்திரங்கள் கட்டுவித்தாள்;”
18ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவும் தமிழகமும் போரும் கொள்ளையும் கொலையுமாகவே இருந்திருக்கிறது. கிழக்கிந்திய நிறுவனம் திப்பு சுல்தானையும் பாளையக்காரர்களையும் அழித்த பின்பு ஒழுங்குபடுத்தப்பட்ட அரசாங்கத் துறைகள் வந்திருக்கின்றன. காந்தியின் அகிம்சையைக் குறிப்பிடும் போது அவர் ஆங்கிலேயருக்கும் ஒரு படி மேலான அறத்தை பின்பற்றியதால்தான் அவரை ஆங்கிலேயரால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பது சரியென்றே தோன்றுகிறது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆங்கிலேய ஆட்சியை மக்கள் ஓரளவிற்கு விரும்பியிருக்கிறார்களென்றே தோன்றுகிறது
காவல் கோட்டத்திற்கு இந்த நூலும் ஒரு ஆதாரமாக இருந்துள்ளது என்றே நினைக்கிறேன். பாளையக்காரர்களின் படைகள் தாங்கள் காவல் காக்கும் இடங்களில் நல்லவர்களாகவும் பிற இடங்களில் போய் கொள்ளை அடிப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். காவல் கோட்டத்தில் இந்த குறிப்புகள் உண்டு. ஊரின் காவல் உரிமை அல்லது வேலையைப் பெற அந்த ஊரில் போய் கொள்ளையடிப்பது ஒரு வழக்கம். காவல் கோட்டத்தில் வரும் நாயக்கர் வம்ச கதைகளுக்கான குறிப்புகளும் இதிலோ அல்லது நெல்சனின் மதுரை மானுவலில் இருந்தோதான் கிடைத்திருக்க வேண்டும்.
சில முக்கியமான வரலாற்றுத் தகவல்களைப் பற்றி. தமிழகத்தின் முத்துக்குளித்தலைப் பற்றி இவ்வளவு விரிவாக வேறெந்த நூலிலாவது குறிப்புகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. கொற்கை நாவலில் பட்டுப்பாதை மாதிரி முத்துப்பாதை ஒன்றும் வரலாற்றில் இருந்ததாக குறிப்பு வரும். அவ்வளவு முக்கியமான வணிகத்தைப்பற்றி விரிவான குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் 18 ஆம் நூற்றாண்டில் நிறைய ஆண்டுகளில் முத்துகள் கிடைக்கவில்லையென்றே தெரிகிறது.
இன்னுமொன்று, தமிழக பரதவர்கள் கிறித்துவ மதத்தைத் தழுவிய செய்தி. இதைப் பற்றிய குறிப்புகள் சமந்த் சுப்ரமணியனின் Following Fish - Travels Around The Indian Coast நூலிலும் உண்டு. எழுத்தாளர் ஜோ டி குருஸை சமந்த் பேட்டி எடுத்திருப்பார். அந்த நாட்களில் முகமதியர்களின் வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரதவ தலைவர்கள் போர்ச்சுகீசியர்களின் உதவியை நாடினர். போர்ச்சுகீசியரின் நிபந்தனை, உதவினால் பரதவர் அனைவரும் மதம் மாற வேண்டுமென்பது. அதனை ஏற்றதால் போர்ச்சுகீசியர் முகமதியரை விரட்டினர் (கி.பி.1532). இதை கால்டுவெல் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். பிறகு புனித சேவியர் தூத்துக்குடிக்கு அருகில் குகையில் வாழ்ந்த காலத்தில் எஞ்சி இருந்த பரதவர்களும் கிறித்துவத்தைத் தழுவினர். ஜோ டி குருஸ் இதைக் கவித்துவமாக விளக்கியுள்ளார்.
பரதவர்களின் மாப்பிள்ளை சாமியான திருச்செந்தூர் முருகர் கோயிலை காப்பதற்காகவே போர்ச்சுகீசியர்களின் உதவியை நாடினர் என்று ஜோடி குருஸ் குறிப்பிடுகிறார்.
பாளையக்காரர்களை அழித்த கதைதான் துயர்மிக்கது. கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்களுடன் உறவினர்களையும் சிறுவர்களையும் கூட தூக்கிலிட்டுள்ளனர். மருதுவின் மகன் துரைசாமியை பினாங்குக்கு நாடு கடத்திய ராணுவ அதிகாரியின் குறிப்பை எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் காலச்சுவடு இதழில் விரிவாக எழுதியிருந்தார். கால்டுவெல் இந்த நூலில் துரைசாமி பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஊமைத்துரை சிறையில் இருந்து தப்பித்து நான்கே நாட்களில் பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டையை எழுப்பியது ஆங்கிலேயரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. கால்டுவெல் குறிப்புகளிலும் ஊமைத்துரையை விதந்தோதியிருக்கிறார். மருது சகோதரர்களுடன் பழகிய ராணுவ அதிகாரிகளே அவர்களை காளையார் கோவில் வரை விரட்டி பிடித்திருக்கின்றனர். கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் தூக்கு தண்டனைகள் பெரும் துயரை அளிப்பன.
மருது சகோதரர்களுடனான போருக்கு பிறகு ஏறக்குறைய 42 கோட்டைகளை பாளையக்காரர்களை வைத்தே அழித்துள்ளனர். பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டையை அழித்து அந்த இடத்தில் உழுதிருக்கின்றனர். மக்களிடமிருந்து எல்லாவிதமான ஆயுதங்களையும் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்துள்ளனர். படிப்பவர்களுக்கு வளரி நினைவில் வரலாம்.
ஏறக்குறைய கடைசியாக திருவிதாங்கூரின் தளவாய் வேலுத்தம்பியின் மரணத்தோடு இந்த போர்கள் முடிவடைந்திருக்கின்றன. கர்நாடகப் போர்கள் ராபர்ட் க்ளைவ் காலத்திலிருந்து நூற்றாண்டின் இறுதிவரை நீடித்திருக்கிறது.
கான்சாகிப் அல்லது முகம்மது யூசுப் அல்லது மருதநாயகம் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. கால்டுவெல் மக்களின் நினைவில் கான்சாகிப் நீண்ட நாட்கள் இருந்தாரென குறிப்பிட்டுள்ளார். மருதநாயகத்தைப் பற்றிய நாட்டுப்புற பாடல் ஒன்றின் மூலம்தான் கமல் மருதநாயகம் படம் எடுக்க முயற்சி செய்தார்.
வரலாற்று நூல்களைப் படிப்பது நிறைய தகவல்களை நாமே கண்டுபிடிப்பது போன்ற உணர்வைத்தான் தருகிறது. வரலாற்றின் சமீப காலங்களில் ஒளி பாய்ச்சும் ஒரு முக்கியமான ஆவணம் இந்த நூல்.
Comments