Skip to main content

பாம்பின் கண் - தியடோர் பாஸ்கரன்

தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதிய The Eye Of The Serpent என்ற நூலை திரு.லதானந்த் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நான் தியடோர் பாஸ்கரனின் எம் தமிழர் செய்த படம் என்ற நூலை முன்பே வாசித்திருக்கிறேன். இந்த நூல்தான் முதலில் எழுதப்பட்டது என்றாலும், ஏற்கனவே எம் தமிழர் செய்த படம் புத்தகத்தில் உள்ள தகவல்கள் நிறைய இதிலும் உள்ளதால் படிப்பதிலுள்ள ஆர்வம் சற்று மட்டுப்பட்டது. தியடோர் பாஸ்கரனின் அழகிய சரளமான பத்தி மொழி எழுத்து எனக்கு மிகவும் பிடித்தது. கானுயிர் சார்ந்த தமிழ் எழுத்தில் முன்னோடியான அவரின் கானுயிர் நூல்கள் மகத்தானவை.

தமிழ் திரைப்பட வரலாற்றில் அவர் அளவுக்கு மௌன படங்களையும் ஆரம்ப கால பேசும் படங்களையும் ஆராய்ந்தவர்கள் இல்லையென்றே நினைக்கிறேன். ராண்டார் கை சில நூல்களை எழுதியுள்ளார் என்பது தெரிந்தாலும், ராண்டார் கை சென்னையை மையமாகக் கொண்டே நிறைய எழுதியுள்ளார். தியடோர் பாஸ்கரனின் முக்கியமான அவதானிப்புகளில் ஒன்று திரைப்படம் மதச்சார்பற்ற கலை வடிவம் என்பது. இந்தியாவின் பாரம்பரிய கலைகள் கோயில் பண்பாட்டை ஒட்டியே இருந்ததால் அவை கலைகள் ஆயினும் மதத்தோடு கொண்ட தொடர்பு தவிர்க்க முடியாததாயிற்று. அதைவிட முக்கியம் இன்றும் நமக்கு தேர்ந்த விமர்சன வடிவமோ அறிவோ இல்லாதது. அவர் குறிப்பிடும் குறைகளில் இன்னொன்று, நாம் திரைப்படத்தை நாடகத்தின் இன்னொரு வடிவமாக எண்ணியது இன்றும் தொடர்கிறது. மேடை நாடகங்களில் இருந்த பாடல் காட்சிகள் இவ்வாறே இன்றும் தொடர்கின்றன.

எம் தமிழர் செய்த படம் புத்தகத்தில் இருந்தே நான் ஆர்வத்துடன் படித்து வருவது, திரைப்படத்தை ஒரு தொழிலாக நாம் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பது. சாமிக்கண்ணு வின்சென்ட் (ஏறக்குறைய தமிழ் நாட்டின் தாதாசாஹேப் பால்கே), ஆர்.வெங்கையா ( இந்தியர் ஒருவரால் சென்னையில் கட்டப்பட்ட முதல் தியேட்டர் கெயிட்டி, பின்னர் ராக்ஸி தியேட்டர்), நடராஜ முதலியார் (சென்னையின் முதல் ஸ்டுடியோ மற்றும் முதல் தமிழ் சலனப்படம் கீசக வதம் எடுத்தவர்) மற்றும் ராஜா சாண்டோ என்று திரைப்படத்தின் மேல் ஆர்வம் கொண்டு இயங்கிய முன்னோடிகளைப் பற்றி இவரே எழுதியுள்ளார். ஆர்.வெங்கையாவின் மகனான ரகுபதி பிரகாசா தமிழ் திரைப்பட தொழிலுக்கு நல்ல அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவர். இவர்களில் சிலரை கௌரவிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவாஜியே (https://www.youtube.com/watch?v=qBfUwqeImqA) முன்னோடிகளைப் பற்றி திரைத்துறையினரை விட இதில் ஈடுபடாத இவருக்குத்தான் நிறைய தெரிந்திருக்கிறது என்று பேசினார். நம் வரலாற்று மனநிலையின் ஓர் உதாரணம் இது.

கீசக வதம் படத்தில் நடித்தவர்களுக்கு பயிற்சி அளித்தவர் பம்மல் சம்மந்த முதலியாரின் சுகுணவிலாஸ் சபாவின் நடிகர் ரங்கவடிவேலு. நாம் அன்றிலிருந்து இன்றும் திரைப்படம் என்பது நாடக மேடைக்கு பதிலாக அமைந்த இன்னொரு மேடை என்றே எண்ணி வருகிறோம். இன்றைக்கு உலகத்திரைப்படங்களுக்கு Subtitles இருப்பது போல அன்றைய மௌனப்படங்களின் காட்சிகளுக்கு விவரணை அட்டைகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

புத்தகம் முழுக்க இந்திய திரைப்பட உலகின் முன்னோடிகளின் முயற்சிகளும் வெற்றிகளும் தோல்விகளும் வந்து கொண்டே இருக்கின்றன. இவ்வளவு தகவல்களை சேகரித்து, கால வரிசைப்படுத்தி, தொடர்புகளை தெளிவு படுத்தி தெளிவான மொழியில் எழுதியுள்ளார். எப்பேர்ப்பட்ட உழைப்பு! அவரின் கானுயிர் நூல்களுக்கு ஈடான உழைப்பை தமிழ் திரைப்பட வரலாற்றின் ஆரம்ப நாட்களுக்கு வழங்கியுள்ளார். அவரின் தேர்ந்த ரசனை அக்கால திரைப்படங்களை விமர்சன ரீதியாகவும் அணுக வைத்துள்ளது. நிறைய படங்களின் பிரதிகளே இல்லையென்றாலும் தகவல்களைத் தேடிதேடி கண்டுபிடித்துள்ளார். கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியாரின் பொக்கிஷங்கள் இவருக்கு உதவியிருக்கின்றன. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் அமைய முயன்றவர்களில் தியடோர் பாஸ்கரனும் ஒருவர். எம் தமிழர் செய்த படத்தை விட மிக அதிக தகவல்களை இந்த புத்தகம் உள்ளடக்கியிருந்தாலும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் திரைப்படங்களை தம் வாழ்வை விட மேலாக நினைக்கும் தமிழர்களுக்கும் இப்புத்தகம் முக்கியமான ஆவணம்.

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...