Skip to main content

The Idol Thief - புத்தகமும் சில நினைவுகளும்

காஞ்சிபுரம் அருகே உள்ள எங்கள் கிராமத்தின் ஓர் எல்லையில் கைலாசநாதர் கோயிலும் இன்னோர் எல்லையில் சஞ்சீவிராயர் கோயிலும் உள்ளன. சஞ்சீவிராயர் ஆலயத்தை விஜயநகர ஆட்சிகாலத்தில், 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், லட்சுமி குமார தாத தேசிகர் எடுப்பித்தார். தாதசமுத்திரம் எனும் 130 ஏக்கர் அழகான ஏரியையும் வெட்டி(கட்டி)யுள்ளார். கைலாசநாதர் கோயிலைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளேதும் இல்லை. இக்கோயில்களின் மூலவர்கள் மட்டுமே கோயிலினுள்ளே உள்ளனர். உற்சவமூர்த்திகள் ஊரின் நடுவே உள்ள அளவில் சிறிய சுப்ரமணியர் ஆலயத்திலும் செல்வ விநாயாகர் ஆலயத்திலும் உள்ளன. முதன் முதலாக இதன் காரணம் தெரிந்த போது அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது.

1960களில் சஞ்சீவிராயர் கோயிலின் உற்சவர் சஞ்சீவிராயரைத் திருடிச்சென்றுவிட்டனர். திருச்சியில் ஏதோ துணிக்கடையில் சேலைத் தொடர்பான உரையாடலில் சீலை என்ற சொல்லால் நிகழ்ந்த குழப்பத்தில் துணி வாங்க வந்தவர்கள் சிலைத் திருட்டைப் பற்றி உளறிவிட்டிருக்கின்றனர் (எங்கள் சஞ்சீவிராயர் அப்படி உளறவைத்தார் என்பது நம்பிக்கை). அன்றிரவு பிற உற்சவ மூர்த்திகளுடன் வெளிநாடு கடத்தப்பட இருந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. பெரும் திருவிழா எடுத்து சஞ்சீவிராயரை ஊருக்குள் அழைத்து வந்துள்ளனர். இதன் பிறகே சஞ்சீவிராயர் கோயிலின் உற்சவர்கள் செல்வ விநாயகர் கோயிலுக்கும் கைலாசநாதர் கோயிலின் உற்சவர்கள் சுப்ரமணியர் கோயிலுக்கும் கொண்டுவரப்பட்டனர். திருவிழா நாட்களில் மட்டும் அந்தந்த கோயிலுக்குச் செல்கின்றனர்.

கைலாசநாதர் கோயிலினுள்ளே விநாயகர் மற்றும் முருகருக்கு தனியே கருவறை உண்டு. விநாயகர் கருவறையில் ஒரு பெரிய மற்றும் ஒரு சிறிய விநாயகர் இருந்தனர். 1990களின் ஆரம்பத்தில் பெரிய விநாயகரை திருடர்கள் பெயர்த்து எடுத்துச்சென்றுவிட்டனர். இதில் திருட்டை விட இப்போது ஆச்சரியம் அளிப்பது அதை கிராமத்தில் யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை என்பதுதான். புதிதாக எழுப்பும் விநாயகர் கோயிலுக்கு சிலையைப் புதிதாகச் செய்வதை விட திருடி வைப்பதே பலன் மிகுந்தது என்ற ஓர் அசட்டு நம்பிக்கை பரவலாக இருந்ததும் ஒரு காரணம். இந்த இரண்டு கோயில்களுக்கும் அருகில் நிறைய வீடுகள் இப்போது கட்டப்பட்டுவிட்டாலும் இன்னுமே கூட இந்தக் கோயில்கள் பாதுகாப்புடன் உள்ளன என்று சொல்ல முடியாது.

கடந்த வாரம் The Idol Thief என்ற ஆங்கிலத்தில் வெளியான புத்தகத்தை அதன் ஆசிரியர் திரு.விஜயகுமாரிடம் பெற்றுக்கொண்டேன். ஏற்கனவே சிலமுறை இவரை நேரில் பார்த்திருக்கிறேன். சிங்கப்பூரில் திரு.ஆமருவி தேவநாதன் ஒருங்கிணைக்கும் சங்கப்பலகை நிகழ்ச்சியில் கோயில் மற்றும் சிற்பக்கலை பற்றி உரையாற்றியிருக்கிறார். வெகுகாலம் முன்பே பொன்னியின் செல்வன் யாகூ குழுமத்திலும் இவரின் பதிவுகளைப் படித்திருக்கிறேன்.


தமிழகத்தின் கோயில் சிலைகளும் உற்சவ மூர்த்திகளும் மிக எளிதாகக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. விஜயகுமார் அவரின் தனிப்பட்ட ஆர்வத்தாலும் செப்புத்திருமேனிகளைப் பற்றி அவரே தேடியடைந்த ஞானத்தாலும் பல சிலைகளை மீட்க அவரின் குழுமத்தினரோடு பெரும்பணியாற்றியிருக்கிறார். அவர் வீட்டில் நுழையும் போது வரவேற்பது திரு.து.அ. கோபிநாத ராவின் இந்திய மூர்த்தியுருவங்களைப் பற்றிய புகழ்பெற்ற நூல் (Elements of Indian Iconography). மேலும் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் மற்றும் அமெரிக்கக் காவல் துறையினருடன் பணியாற்றி மூர்த்திகளை கோயில்களுக்கு மீட்டுக் கொண்டுவர உதவியிருக்கிறார். ஸ்ரீபுரந்தான் மற்றும் சுத்தமல்லி கோயில்களின் அனைத்துச் செப்புத்திருமேனிகளும் விருத்தாச்சலம் கோயில் சிற்பமான அர்த்தநாரீஸ்வரரும் திருடப்பட்டதே சில ஆண்டுகளுக்குப் பிறகே இங்குள்ளவர்களுக்கு தெரிய வருகிறது. திருடப்பட்ட சிலைகள் உலகெங்குமுள்ள அருங்காட்சியகங்களுக்கும் தனியார்களுக்கும் விற்கப்பட்டன. இந்தியாவில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய சுபாஷ் கபூர்தான் இவற்றை உள்ளூர் ஆட்கள் உதவியுடன் திருடி பலகோடி ரூபாய்களுக்கு விற்றிருக்கிறான். ஆனால் விஜயகுமாரின் கூற்றுப்படி தற்போது சிக்கியிருப்பது ஒரு கடத்தல் கும்பல் மட்டும் தான். இவர்களைப் போல மேலும் பலர் உள்ளனர்.

திருடப்பட்டவற்றில் சில திருமேனிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன என்றாலும் அவற்றுக்கான உழைப்பு பிரம்மிப்பானது. ஒவ்வொரு சிலையாக அடையாளம் கண்டு அவை 1972க்கு பிறகு இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்று நிரூபிக்க வேண்டியுள்ளது. அவை இந்தியக் கோயிலில் இருந்து திருடப்பட்டவை என்று தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க விஜயகுமார் பெரும்பங்காற்றியிருக்கிறார். பாண்டிச்சேரியில் உள்ள French Institute of Pondicherry 1955 ஆம் ஆண்டிலிருந்து தமிழகக் கோயில்களையும், சிற்பங்களையும், உற்சவ மூர்த்திகளையும் புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தியிருக்கின்றனர். அவர்களின் புகைப்படங்களே ஒப்பிட்டுப் பார்க்க உதவியிருக்கின்றன. அதில் சுத்தமல்லியின் கோயிலின் புகைப்படம் 24 ஜீன் 1961 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. சிலைகளை மீட்க இந்தப் புகைப்படங்கள் தற்போது உதவியிருக்கின்றன.

புத்தகத்தின் ஆரம்பத்தில் மெழுகும் குங்கிலியமும் கொண்டு உற்சவமூர்த்திகள் உருவாக்குவதைப் பற்றியும் விளக்கியுள்ளார். பிறகு 1311 ஆம் ஆண்டின் மாலிக்காபூரின் படையெடுப்பால் தமிழகமெங்கும் திருமேனிகள் புதைக்கப்பட்டதையும் குறியீடாக சொல்லிச் செல்கிறார். இந்தப் புத்தகம் மீட்கப்பட்ட சில சிலைகளின் பின் உள்ள உழைப்பு/வலி/அயர்ச்சி மிகுந்த, அசாத்திய ஆர்வமும் பொறுமையும் அர்ப்பணிப்பும் மிகுந்த சிலரின் வெற்றிக்கதையை மிகுந்த சுவாரசியமாக கூறிச்செல்கிறது. சில மணி நேரங்களில் முழுவதுமாக வாசித்து விட முடிகிறது. ஆனால் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்ட இக்காலத்திலேயே காணாமல் போன நிறைய சிலைகளைப் பற்றிய எந்த துப்பும் இன்னும் கிடைக்கவில்லை. தனியாருக்கு விற்கப்பட்டிருந்தால் தகவல் கிடைப்புது ஏறக்குறைய முடியாத காரியம்.

இவர் முன்னர் உரையாற்றிய போது தெரிவித்த சில உத்திகளே திருட்டைத் தடுக்க ஓரளவிற்கு உதவி செய்யும். திருமேனிகள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். கோயில் தினமும் திறக்கப்பட்டு பூஜைகள் தினமும் நடைபெற வேண்டும். ஸ்ரீபுரந்தானிலும் சுத்தமல்லியிலும் கோயிலே சில மாதங்களுக்கு ஒருமுறைதான் திறக்கப்பட்டுள்ளன. அனைத்துத் திருமேனிகளையும் எந்த அலங்காரமும் இல்லாமல் அனைத்துக் கோணங்களிலும் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். அந்த புகைப்படங்களைப் பொதுவெளியில் பகிர வேண்டும். ஏனெனில் வாங்குபவர்களுக்கு அவை திருடப்பட்டதென (உடனடியாக அல்லது எளிதாக) தெரிந்தால் வாங்க மாட்டார்கள்.

இந்தப் புத்தகத்தை எவரும் படிக்கும் விதத்தில் எளிமையாகவும் விறுவிறுப்புடனும் எழுதியுள்ளார். புத்தகத்தின் இறுதியில் சோழர்கால கலைகளைப் பற்றிய சில நல்ல புத்தகங்களின் பட்டியலும் உள்ளன. இந்த காலத்தில் வெளியான நாளேடுகளின் செய்தி சுட்டிகளும் உள்ளன. திரு.விஜயகுமாருக்கு எனது வணக்கங்களும் நன்றிகளும். இந்தப் புத்தகத்தை இந்தியாவில் இருப்பவர்கள் அமேசானில் வாங்கலாம். அழகான கெட்டி அட்டைப் புத்தகமாக இப்போது கிடைக்கிறது. விரைவில் தமிழிலும் வெளிவர உள்ளது. நிச்சயம் தமிழிலும் வாங்கிப் படிப்பேன். புத்தகத்தை இணையத்தில் வாங்க


வரும் வாரம் 29 ஆம் தேதி சிங்கப்பூரிலும் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...