Skip to main content

காலாற ஒரு நடை அல்லது வாஷிங்டனில் வெங்கடாசலம் (2)

மீண்டும் வாஷிங்டன் போகும் திட்டமிருக்கிறதா, உடன் வர முடியுமா என அலுவலக நண்பர் கேட்டவுடன் சரியென்று சொல்லி விட்டேன். சென்ற முறை நேரம் ஆகிவிடும் என்ற காரணத்தால் ஃபோர்ட் அரங்கத்திற்கும் ஜார்ஜ் டவுனுக்கும் செல்லவில்லை. ஃபோர்ட் நாடக அரங்கம் எங்கிருக்கிறது என சரியாக பார்க்காமல் விட்டிருந்தேன். மால் பகுதியில் தான் இருக்கிறது என பின்னர்தான் தெரிந்துகொண்டேன். ஜார்ஜ் டவுனுக்கு மட்டும் தனியே பேருந்தில் செல்ல வேண்டும்.

ஃபோர்ட் தியேட்டரில் என்ன? இன்றும் அது நாடக அரங்காக இயங்கிக் கொண்டிருக்கிறது. 1865, ஏப்ரல் 14 ஆம் நாள் இரவு வெறும் நாடகம் மட்டும் நிகழவில்லை. அமெரிக்காவின் அடிமையொழிப்பை எதிர்த்து அணிதிரண்ட கான்ஃபெடரேட்ஸ் என்று அறியப்படும் தெற்கு மாநிலங்களின் ராணுவத்துடன் 5 ஆண்டுகளுக்கும் மேல் நடந்த உள்நாட்டு யுத்தம் 1865, ஏப்ரல் 9 ஆம் தேதி முடிவடைந்தது. அமெரிக்க அரசின் படையினரிடம் தெற்கு படையினர் சரணடைந்தனர். மனைவியின் வற்புறுத்தலின் பேரில் ஃபோர்ட் அரங்கிற்கு அன்று நாடகம் பார்க்க வந்தார் அமெரிக்கவின் 16 வது அதிபர் ஆபிரஹாம் லிங்கன். போர் முடிந்து 5 நாட்களே ஆகியிருந்தன. அதிபருக்கென்று இருந்த ஒரு தனியிடத்திலிருந்து நாடகத்தைப் பார்த்து கொண்டிருந்த லிங்கனை ஜான் வில்க்ஸ் பூத் என்ற புகழ்பெற்ற நாடக நடிகர் தலையின் பின்பக்கம் வெகு அருகில் இருந்து சுட்டார். சுட்டுவிட்டு கீழே குதித்து தெற்கு பழி தீர்க்கப்பட்டது என்று கூக்குரலிட்டு தப்பியோடினார்.

குண்டடி பட்ட லிங்கனை வெள்ளை மாளிகை வரை தூக்கிச் செல்ல முடியாதென்று அரங்கின் நேரெதிரில் இருந்த பீட்டர்சன் என்பவரின் வீட்டுக்கு கொண்டு சென்றனர். மறுநாள் காலையில் லிங்கன் உயிரிழந்தார்.ஏறக்குறைய தன் பதவிக்காலம் முழுதும் உள்நாட்டுப் போரிலேயே செலவிட்டு நிறையவே சோர்ந்திருந்த லிங்கனின் வாழ்வு போரோடு சேர்ந்து முடிந்து போனது. ஏறக்குறைய மகாத்மா காந்தியின் வாழ்வு மாதிரியே தான்.

நாங்கள் புறப்பட்ட காலையில் 10.30 க்கு ஒரு நாடகம் (கிறிஸ்மஸ் கேரல்) நடக்க இருந்ததால் எங்களால் அரங்கத்தைப் பார்க்க முடியவில்லை. அருங்காட்சியகத்திற்கு மட்டும் சென்றோம். லிங்கன் சுடப்பட்ட துப்பாக்கியை காட்சிக்கு வைத்துள்ளனர். லிங்கனைக் கொன்ற மற்றும் பிற குடியரசு கட்சித் தலைவர்களைக் கொல்ல முயன்றவர்களுடைய சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. லிங்கனின் புகழ்பெற்ற (Team of Rivals) அணியில் இருந்த சீவெர்ட் ஐ கொல்ல நடந்த முயற்சியில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார். துணை அதிபர் தாக்குதலில் இருந்து தப்பித்தார். அவரைக் கொல்ல வந்தவன் பயத்தில் குடிக்கச் சென்றுவிட்டான். இவர்களில் ஒருவர் மேரி சுரட் என்ற பெண். பூத்தின் ஆலோசனையின் பேரில் துப்பாக்கியை கொடுத்தனுப்பினார். இவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். பூத் மட்டும் தேடுதலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். காவல்துறை பூத்தை தேடிக் கொன்றது ஒரு தனிக்கதை. குருதி படிந்த லிங்கனின் தலையணை உட்பட நிறைய தடயங்களை பத்திரபடுத்தியுள்ளனர். லிங்கனின் புகழ் பெற்ற கெட்டிஸ்பெர்க் உரையை கிளிண்டன், புஷ் உட்பட முன்னாள் அதிபர்களை பேச வைத்து பதிவு செய்து வைத்துள்ளனர்.

பிறகு எதிரில் உள்ள பீட்டர்சன் வீட்டிற்கு சென்றோம்.


இங்குதான் லிங்கன் உயிரைக் காப்பாற்ற அன்று இரவு முழுதும் மருத்துவக்குழு முயன்றது. ஆனால் அதிகமான குருதி வெளியேற்றத்தால் அவரை காப்பாற்ற முடியாதென அதிகாலை 4 மணியளவில் அறிவித்தனர். காலை 7 மணிக்கு மேல் அவர் உயிர் பிரிந்தது.


அன்று அவர் படுக்க வைக்கப்பட்ட படுக்கை சிகாகோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு வேறொரு படுக்கையை வைத்துள்ளனர்.
இவை அனைத்தையும் விட முக்கியமான செய்தி லிங்கனின் புத்தக கோபுரம். இதுவரை லிங்கனைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகங்களை வைத்து ஒரு கோபுரத்தை எழுப்பியுள்ளனர். மூன்று மாடி உயரம் உள்ள கோபுரம்.


கோபுரத்தின் அடியில் ஒரு வாசகம் பதிக்கப்பட்டுள்ளது.நமது 16வது அதிபரைப் பற்றிய கடைசிச் சொல் எழுதப்படாது. ஏனெனில் ஒவ்வொரு தலைமுறையும் தங்களுக்கான லிங்கனை உருவாக்குகிறார்கள். நமக்கு அப்படி ஒருவர் இருப்பாரானால், அது மகாத்மா காந்தி மட்டும் தான்.


லிங்கனைப்பற்றி பிற அமெரிக்க மற்றும் உலகத்தலைவர்கள் கூறியதையும் காட்சிக்கு வைத்துள்ளனர். மகாத்மா காந்தி மற்றும் அன்னை தெரசாவின் வாசகங்களும் வைக்கப்பட்டுள்ளன.
காந்தியின் வாசகம் தனக்காகவும் இதை சொன்னது போல் உள்ளது.


வெள்ளை மாளிகை இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே உள்ளது.

இதற்கு பிறகு மறுபடியும் மால் பகுதியிலேயே சுற்றிவிட்டு திரும்பி வந்து சேர்ந்தோம். வாஷிங்டன் நிறைய முன்னேறி விட்டாலும், ஜார்ஜ்டவுன் பழைய நினைவுகளுக்காக அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனால் தான் இந்த பகுதியில் மெட்ரோ ரயில் இணைப்பில்லை என்று ஒருவர் சொன்னார். ஆனால் அன்றும் நேரமாகிவிடவே ஜார்ஜ் ட்வுனுக்கு செல்ல முடியவில்லை. மறுபடி மார்டின் லூதர் கிங் நினைவிடத்திற்கு சென்றோம். இன்று கூட்டம் குறைவாகவே இருந்தது.


வாஷிங்டனில் சில சாலைகளின் பெயர்கள் எண்களாலும் (1, 2, etc.) சில ஆங்கில எழுத்துகளாலும் (A,B, etc) மற்றும் சில வேறு பெயர்களாலும் (Constitution Avenue, Independence Avenue, etc) குறிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் சாலைகளின் பெயர்கள் உடனே ஞாபகத்திற்கு வருகின்றன. சில சாலைகள் அங்கு நடந்த தொழில்களின் பெயரால் குறிப்பிடப்பட்டன (வணிகர் வீதி, நெல்லுக்கார தெரு, மண்டித் தெரு, எண்ணெய்க்காரத் தெரு) சில சாலைகள் அங்கு இருக்கும் நன்கு தெரிந்த இடங்களின் பெயராலும் (மடத்தெரு, ரயில்வே ரோடு, சன்னதி அல்லது கோவில் தெருக்கள்) அழைப்படுகின்றன. சில சாலைகள் அவற்றின் குணத்தாலும் அழைப்படுகின்றன (பள்ளத்தெரு, மேட்டுத்தெரு, தோப்புத்தெரு) அந்த பெயர்கள் இப்போது தலைவர்களின் பெயர்களால் மாற்றப்பட்டு வருகின்றன. முடிந்தால் இந்த பெயர் மாற்றங்கள் பற்றி தனியாக எழுத வேண்டும்.

Comments

Murugan said…
superb post - Murugan C

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...