Skip to main content

காலாற ஒரு நடை அல்லது வாஷிங்டனில் வெங்கடாசலம் (1)

சில சமயம் தற்செயலாக நமக்கு பிடித்த இடத்திற்கு போகும் வாய்ப்பு கிடைப்பது ஆச்சர்யம் தான். கடந்த ஜூலை மாதம் லாஸ் ஏஞ்சலஸ் அருகில் உள்ள ஆண்டாரியோ எனும் ஊருக்கு செல்ல நேர்ந்தது. ஏறக்குறைய இரண்டு மாதங்கள் பணி நிமித்தமாக அங்கு தங்கியிருந்தேன். அவ்வளவு நாள் இருந்ததால், சான் டியாகோ நகருக்கு சென்றிருந்தேன். நண்பன் ராஜாகுமார் சான் டியாகோவிலிருந்து ஆண்டாரியோ வந்து அழைத்துச் சென்றான். வேறு சில வாரயிறுதி நாட்களில் வெனீஸ் மற்றும் சாண்டா மோனிகா கடற்கரைக்கும் சென்றிருந்தேன். அதெல்லாம் பெரிய விஷயமாகவே இப்போது தெரியவில்லை.

அக்டோபர் மாதம் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் உள்ள கொலம்பியா எனும் நகரத்துக்கு சென்றிருந்தேன். நண்பர் ஒருவர் கொலம்பியா என்றவுடன், நீ எப்படி தென்னமெரிக்கா சென்றாய் என்று கேட்டுவிட்டார். எனக்கு தேவையில்லாமல் பாப்லோ எஸ்கோபர் பெயரெல்லம் ஞாபகத்துக்கு வர ஆரம்பித்து விட்டது. அதனால் தான் இங்கு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட்டேன். வாஷிங்டன் அருகில் இருப்பதால், ஒரு சனிக்கிழமை காலையில் பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டேன். Greenbelt Metro ரயில் நிலையம் வரை காரில் சென்று அங்கிருந்து ரயிலில் சென்று, smithsonian நிலையத்தில் இறங்கினேன். காலை 9.30 க்கே சென்றுவிட்டதால், குளிரில் நடுங்க ஆரம்பித்து விட்டேன். சூரிய வெளிச்சமெல்லாம் இங்கு ஏமாற்று வேலை. சூட்டுக்கும் சூரியனுக்கும் சம்மந்தமே இல்லை.

வெளியே வந்து பார்த்தால், ஒரு பக்கம் வாஷிங்டன் (George Washington) நினைவுத்தூணும் மறுபக்கம் நாடாளுமன்றமும் (Capitol). தொலைந்துவிடுவேன் என்ற பயத்தால், ஏற்கனவே மால் (The Mall Area) பகுதியின் வரைபடம் கையில் வைத்திருந்தேன். நடந்து செல்ல திட்டமிட்டிருந்ததால், Iwo Jima நினைவிடத்தை ஒரு எல்லையாகவும், காங்கிரஸ் நூலகத்தின் பின்புறம் உள்ள ஷேக்ஸ்பியர் நூலத்தை மறு எல்லையாகவும் குறித்து வைத்திருந்தேன். இதேபோல ஆனால் கையில் எந்த வரைபடமும் இல்லாமல் 2009 ஜூலை மாதம் பாரிஸ் நகரிலும், ஆம்ஸ்டடாம் நகரிலும் சுற்றியலைந்த ஞாபகம் இன்னும் நினைவிலிருக்கிறது. அதற்கு பிறகு கோலாலம்பூரில் மனைவியுடன் இரண்டு நாட்கள் ஊர் சுற்றியிருந்தேன்.

வாஷிங்டன் நினைவுத்தூண் (2011 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு, தற்சமயம் புனரமைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது) , இரண்டாம் உலகப்போர் நினைவிடம் தாண்டி லிங்கன் நினைவிடம் சென்றேன். நீண்ட பிரதிபலிக்கும் குளத்தின் ஒரு முனையில் ஆபிரஹாம் லிங்கனின் நினைவிடம் உள்ளது. பிரமாண்டமான தூண்களுடன் அமைந்துள்ள நினைவிடத்தின் உத்தரத்துக்கு மேல் மாநிலங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நினைவிடத்தில் இருந்துதான் மார்டின் லூதர் கிங் “எனக்கு ஒரு கனவு உள்ளது” என்ற புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். நினைவிடத்தின் இரு பக்கங்களில் லிங்கனின் இரண்டாவது பதவியேற்பு மற்றும் கெட்டிஸ்பர்க் உரைகளை பதித்துள்ளனர்.


நினைவிடத்தின் தரை தளத்தில், லிங்கனின் புகைப்படங்கள் மற்றும் தபால்தலைகள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் நினைவிடத்தில் நடந்த பிற வரலாற்று நிகழ்வுளின் தொகுப்புகளும் உள்ளன. லிங்கனின் புகழ்பெற்ற வரிகளையும் கல்வெட்டாக செதுக்கி வைத்துள்ளனர்.

அடிமைத்தனத்தை ஒழித்ததை விட, அமெரிக்காவை பிளவுபடாமல் காத்ததற்காகவே அதிகம் நினைக்கப்படுகிறார். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ”வாஷிங்டன் உருவாக்கிய, லிங்கன் காப்பாற்றிய” தேசம் என்ற குறிப்புகளை கண்டேன். அங்கிருந்த கல்வெட்டு ஒன்றில் இருந்த லிங்கனின் செய்தி - “If I could save the Union without freeing any slave, I would do it, and if I could save it by freeing all the slaves, I would do it, and if I could save it by freeing some and leaving others alone, I would also do that."

பிறகு அங்கிருந்து இவோ ஜிமா நினைவிடம் செல்லும் திட்டத்தை கைவிட்டேன். குளிரில், பொட்டொமாக் ஆற்றின் பாலத்தின் மேல் செல்லும் தைரியமெல்லாம் வரவில்லை. அடுத்து மார்டின் லூதர் கிங் (ஜூனியர்) நினைவிடத்திற்கு சென்றேன். MLK Jr. கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருக்கிறார்.

காலையிலேயே அதிகமான கூட்டம் இருந்ததால் உடனே கிளம்பிவிட்டேன். அங்கிருந்து பார்த்தால் அமெரிக்க (அதிகாரப்பூர்வமாக) மூன்றாவது அதிபர் தாமஸ் ஜெபர்சனின் நினைவிடம் ஆற்றின் கரையோரத்தில் தெரிகிறது.

ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் நினைவிடமும் அருகில் உள்ளது. குளிரில் வேகமாக நடந்து, தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்துக்கு வந்து சேர்ந்தேன். இங்குள்ள அருங்காட்சியகத்துக்கெல்லாம் கட்டணம் கிடையாது. ஏவுகணைகள்,அன்றைய சோவியத் யூனியன் / அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிகள், போட்டிகள், அமெரிக்காவின் வெற்றிகரமான சந்திரன் பயணம், விண்வெளி ஆடைகள், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரின் விமானங்கள் என தெரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் நிறைய விஷயங்கள் உள்ள அருங்காட்சியகம். ஒரு நாள் முழுக்கவே போதாதென்று தோன்றியது. அடுத்து நாடாளுமன்றத்தை நோக்கி நடையைக் கட்டினேன்.
ஸ்னோடவுனுக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தது.
அந்த இடத்தைக் கடந்து நாடாளுமன்றத்தின் முன் பக்கமிருந்த காங்கிரஸ் நூலகத்தை நோக்கி நடையைக் கட்டினேன்.



நான் தங்கியிருந்த இடத்திற்கு செல்ல ஒரு ரயில் மற்றும் இரண்டு பேருந்து மாறி செல்ல வேண்டியிருந்ததால் வெளியில் இருந்து மட்டும் பார்த்துவிட்டு வரவேண்டியிருந்தது. உலகின் மிகப்பெரிய நூலகத்திற்கு இவ்வளவு அருகில் வந்தும் உள்ளே செல்ல முடியவில்லை. ஆனால் ஆண்டாரியோவில் இருந்த போது அங்கிருந்த ஒரு பொது நூலகத்தில் உறுப்பினராகவே சேர்ந்திருந்தேன்.



இதே போல இன்னொரு முக்கியமான இடத்திலும் ஒரு ஏமாற்றம் நடந்தது. அதைப்பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். மறுபடியும் ரயில் பிடித்து Greenbelt ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து பால்டிமோர் விமான நிலையத்துக்கு பேருந்தில் வந்து இறங்கினேன். அங்கு பேருந்துக்காக ஒரு மணி நேரம் காத்திருந்து பிறகு கொலம்பியா வந்து சேர்ந்தேன். நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வர இரவு 8.30 மணி ஆகிவிட்டது.

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...