Skip to main content

சமீபத்தில் வாசித்தவை

சமீபகாலமாக புத்தக வாசிப்பு குறைந்தே இருந்தது. திடீரென்று தோன்றியதோ என்னவோ மறுபடியும் வாசிப்பின் சுகம் கிட்டியிருக்கிறது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்

எளிமையாக, படிக்க சுகமான அனுபவங்கள். சின்ன அண்ணாமலை அவர்களின் நட்புகள் எனக்கு ஏறக்குறைய நாடக, திரைப்பட நடிகர், எழுத்தாளர் பாரதிமணி அவர்களை ஞாபகப்படுத்தியது. ராஜாஜி மீதான அவரின் பக்தி. கல்கியுடனான அவரின் நட்பு ஆச்சரியமாகவே இருந்தது. இவர் நடந்து வருகிறாரென்று கல்கி ஒரு காரையே இவருக்கு பரிசளித்திருக்கிறார். விடுதலைப் போரட்டத்தில் கைதுசெய்யப்பட்டு திருவாடனை சிறையில் அடைப்பட்ட இவரை மக்கள் சிறையை உடைத்து மீட்டுள்ளனர். அதன் பின் நடந்த துப்பாக்கிச் சூடு பயங்கரமானது. ஆனால் சாதாரணமாக சொல்லி செல்கிறார். இளமையில் மலேசியா பினாங்கில் இருந்து ஆங்கிலேயர்களால் இந்தியாவிறகு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். மபொசியினுடனான நட்பை மிகவும் பெருமையான ஒன்றாக எண்ணியிருந்திருக்கிறார். தமிழ்பண்ணை பதிப்பகம் ஆரம்பித்து நல்ல நூல்களை பதிப்பித்திருக்கிறார். மிக முக்கியமாக திமுகவை எதிர்க்கவும் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கவும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார். நடிகர் மன்றத்தின் தலைவராகவும் சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். தனக்கான நடிகர் மன்றத்தைக் கூட தான் சேர்ந்த கட்சிக்காக தொடங்கியவர் சிவாஜியாகத்தான் இருக்கும்.


இவ்வளவு தகவல்களை எல்லாம் விட சின்ன அண்னாமலை அவர்களின் நடை உண்மையிலேயே படிக்க எளிமையாக இருக்கிறது. இவர் வாழ்க்கையின் முடிவும் நம்ப முடியாமல்தான் இருக்கிறது. தனது 60 ஆம் பிறந்த நாளன்று நடந்த விழாவில் நிறைய நீர் தலையில் ஊற்றிக் கொண்டே இருந்ததில் மேடையிலேயே மயங்கி மருத்துவமனை போகும் வழியிலேயே இறந்துவிட்டார். இந்த புத்தகம் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. தமிழ் இணைய பல்கலைகழகத்தில் தரவிறக்கக் கிடைக்கிறது.

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-37.htm


திரும்பிச் சென்ற தருணம்

பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் சமீபத்தில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு. குறிப்பிடத்தகுந்த பல கட்டுரைகளின் தொகுப்பு. மருது பாண்டியர்களின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி மிக முக்கியமான கட்டுரை. விடுதலைப் போரில் தமிழகத்தில் நடந்த கொடுமைகளைக் கூட நம்மால் பிறர் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பிம்பங்களை கட்டமைக்க மட்டுமே தெரியும் நமக்கு, வரலாற்றுக்கு பொய்யாகவும். மிகவும் ரசிக்கத்தக்க, புத்திசாலித் தனமான எழுத்து. பிரபந்தகளின் பாதிப்பும், கம்பனின் பாதிப்பும் புத்தகம் முழுக்க பரவி இருக்கிறது. பின்னட்டையில் இருக்கும் வாசகம் கொஞ்சம் கோபத்தை வரவழைத்தது. பி.ஏ.கிருஷ்ணன் ஆழமாகவும் அகலமாகவும் பேசக் கூடியவர் என்று சுரா கூறியிருக்கிறார், ஆழமாகவும் அகலமாகவும் எழுதக் கூடியவர் என்பதற்கு இந்த புத்தகம் சான்று என எழுதியுள்ளனர். ஒவ்வொரு வாக்கியத்தையும் அனுபவித்து எழுதியுள்ளவருக்கு மொண்ணையாக எழுதப் பட்ட அறிமுகம். தந்தையின் நண்பரான பெ.நா.அப்புசாமியைப் பற்றி எழுதும் போது, ராஜாஜிக்கும் வலப்புறம் எனும்போது புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை. இனிமேல் வலது, இடது, புரட்சியெல்லாம் எத்தனைப் பேருக்கு புரியப் போகிறதென தெரியவில்லை. இங்கு எல்லாமே வலதை நோக்கிய பயணமாகவே இருக்கிறது.

எகிப்தைப் பற்றிய கட்டுரையை ஆராய்ச்சிக் கட்டுரை என்றே சொல்லமுடியும். ஆனால் படிக்க எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத எழுத்து. அவர் தந்தையைப் பற்றி எழுதும் போது உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறார். பிடர் பிடித்து உந்த நின்ற விதியைப் பற்றி கூறும் நிகழ்ச்சி உண்மையிலேயே கம்பன் கொடுத்த சமநிலைக்கு உதாரணம். அற்புதமான கம்பன். அங்கோர் வாட் பற்றிய கட்டுரையும் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. அந்தமான் செல்லுலார் சிறை மற்றும் அந்தமான் பழங்குடிகளைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை.

காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. புத்தகத்தை இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-187-8.html

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...