Skip to main content

எங்கள் மகன் பிறந்த கதை!

என் மனைவியின் பிரசவக் கதையை எழுத ரொம்ப ஆசைப்பட்டேன். என் எழுத்து யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சுகன்யாவுக்கு பிடித்திருப்பதால் கண்டிப்பாக எழுத ஆசை. 2011 ஏப்ரல் கடைசி வாரம் நிச்சயம் 2010 ஏப்ரல் போலவே நினைவில் என்றும் தங்கி இருக்கும். கடந்த ஏப்ரலில் திருமணம், திருமணத்திற்கு முந்தைய வாரம் லாஸ் வேகஸில் நடந்த OAUG Colloborate 10 இல் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பென நிறைய மகிழ்ச்சியான தருணங்கள். இந்த வருடம் APICS CSCP தேர்வு முடிவு, முதல் திருமண நாள் மற்றும் குழந்தை :)

சுகன்யாவிற்கு 8 ஆம் மாதம் ஆரம்பித்தவுடன் அத்தையும் மாமாவும் சிங்கப்பூர் வந்தனர். குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தேவையான அனைத்தையும் அண்ணா நகர் JUST BORN இல் பெட்டி நிறைய வாங்கி வந்திருந்தனர். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மார்ச் மாதத்தில் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தோம். ஏப்ரல் முதல் வாரத்தில் விசா கிடைத்து விட்டது. ஏப்ரல் 21 ஆம் தேதி வந்திறங்கினர். முதல் முறையாக வெளி நாட்டிற்கு வந்தாலும், சிங்கப்பூர் என்பதால் சுலபமாக வந்து சேர முடிந்திருந்தது. மறுபடியும் பெட்டி நிறைய பொருள்கள் :)

திருமண நாளை ஒட்டியே பிரசவம் இருக்குமென எதிர்பார்த்திருந்தோம். ஏப்ரல் 30 தான் உத்தேச பிரசவ நாள். சுகன்யா ஏப்ரல் 18 வரை அலுவலகம் சென்றாள். வீட்டில் அனைவருக்குமே இதில் வியப்புதான். சுகன்யாவின் சித்தி ஏப்ரல் முதல் நாளிலிருந்தே அலுவலகம் போகக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியிருந்தார். இரத்த அழுத்தம், எடை எல்லாம் 9ஆம் மாதம் வரை சரியாக இருந்தது. 9ஆம் மாத இறுதியிலேயே மருத்துவர், குழந்தையும் எடை மற்றும் தலையின் சுற்றளவு அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றார். சுகன்யாவிற்கு சுகப்பிரசவம் பெற ஆசை. அந்த அனுபவத்தின் மேல் ஆசை.

ஏப்ரல் 27 ஆம் தேதியே சுகன்யாவிற்கு வலி ஆரம்பமானது. நிறைய இடைவெளி விட்டு வலியும் குறைவாக இருந்தது. ஆனால் மருத்துவர் இன்னும் பொருத்திருக்க வேண்டுமென்றார். மே 3 ஆம் தேதி வரை பிரசவ வலி வராவிட்டால் அன்று மருத்துவமனையில் சேர சொல்லியிருந்தார். இந்த நீண்ட இடைவெளிக்குக் காரணம் நீண்ட வாரயிறுதியும் கூட.

சுகன்யாவிற்கு இரண்டு நாட்களாகவே பிரசவத்திற்கு முந்தைய வலி நிறைய இடைவெளி விட்டு வந்துகொண்டிருந்தாலும், மருத்துவர் 3 ஆம் தேதி வரச் சொன்னதால் பொருத்திருந்தோம். எந்த நேரத்திலும் பிரசவ வலி வரும் என்று திகிலுடனே காத்திருந்தோம். ஏப்ரல் 29ஆம் தேதி இரவு. சுகன்யாவால் தூங்க முடியவில்லை. என்னிடமும் சொல்லவில்லை. படுக்கை அறையிலேயே நடப்பதும் படுப்பதென இருந்தார். அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தேன். 30 ஆம் தேதி விடியல் 3 மணிக்கு சுகன்யா என்னை எழுப்பினாள். மருத்துவ மனையைத் தொடர்பு கொண்டு பேசினோம். கிளம்பி வரச் சொன்னார்கள். பொழுது விடியப் போவோமென சுகன்யா சொல்லவே, காத்திருந்தோம். ஆனால் 3.30 மணிக்கு பனிக்குடம் உடைந்திருக்கலாம் என சந்தேகம். (ஆனால் அது mucus plug திரவம் தான் என்று பிறகு தெரிந்தது )உடனே சென்று சுகன்யா மற்றும் என் அம்மா அப்பாவை எழுப்பினோம். கொஞ்சம் பதற்றத்துடனே கிளம்பினர். ஆனால் சுகன்யா தைரியமாக இருந்தது என் அம்மாவிற்கு பெரும் ஆச்சரியம்.

விடியலில் 4.30 க்கு மருத்துவமனைக்குச் சென்றோம். என்னை பிரசவ கண்கானிப்பு அறையின் வெளியே உட்கார சொல்லிவிட்டு சுகன்யாவை உள்ளே அழைத்துச் சென்றனர். அப்பா அம்மா வெளியே இருக்கும் ஒரு அறையில். உண்மையான பிரசவ வலிதானா என கண்கானிக்கும் அறையில் தனியாக இருப்பதால், ஏற்கனவே அவள் படிக்க ஆரம்பித்த சுஜாதாவின் தீண்டும் இன்பம் நாவலை எடுத்துச் சென்றாள். 45 நிமிடங்களுக்குப் பிறகு செவிலியர் என்னிடம் இது பிரசவ வலிதான் என்றனர். உங்கள் மனைவி வலி நிவாரணி வேண்டாமென சொல்லிவிட்டார் என்றும் கூறினர். அடுத்த 1 மணி நேரத்தில் பிரசவ அறைக்கு சுகன்யா மாற்றப்பட்டார்.

இப்போது நான் கூடவே இருந்தேன். அங்கிருந்த தாதிப்பெண் எங்களை தொலைக்காட்சி பார்க்கலாம் என்றார். இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்து திருமண நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். குழந்தையின் இதயத்துடிப்பை அறியும் கருவியை வயிற்றுப் பகுதியில் பொருத்தினர். சுகன்யாவை சுற்றி ஏகப்பட்ட இயந்திரங்கள், மற்றும் ஒயர்கள். நான் கொஞ்சம் பயந்துதான் இருந்தேன். (என் அனுபவம் அப்படி. ஒருமுறை அக்கா மகனை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்ற போது, அவனுக்கு ஊசி போடுகையில் நான் மிரண்டதில், என்னை அறையை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டார்கள்) . இப்போது, சுகன்யாவின் ரத்த அழுத்ததிற்கும் ஒரு ஒயர். சிறிது நேரத்தில் கையில் ஊசி. அதுவழியே நீர் தனியாக மற்றும் பிற மருந்துகள் செலுத்தினார்கள். வலி அதிகரிக்க ஆரம்பித்தது. அலை அலையாக சரியான இடைவெளீயில் வலி வந்து கொண்டிருந்தது.

மருத்துவர் கண்டிப்பாக epidural நல்லது என்றார். (Epidural என்கிற அற்புதத்தைப் பற்றி சுகன்யா ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தார். அது ஒரு வலி நிவாரண மருந்து. வலி நிவாரணம் இல்லாமலேயே வலியுடன் குழந்தைப் பெற்றுக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.) வலியால் பிரசவத்தின் போது களைப்பு ஏற்பட்டு சுகப்பிரசவம் பாதிக்கலாம் என்றார். epidural க்குப் பின் பனிக்குடத்தை கையால் உடைப்பதென மருத்துவர் முடிவு செய்தார். மயக்க மருந்து நிபுணர் வந்தார். epidural இன் பின்விளைவுகளைச் சொன்னார். காய்ச்சல், குழந்தையின் இதயத்துடிப்பின் வேகம் குறையும், குளிர் நடுக்கம் மற்றும் பல. ஆனால் நிறைய பேர் இதை எடுத்துக் கொள்கிறார்கள். முதுகுத் தண்டில் ஊசி மூலம் இந்த மருந்தைச் செலுத்த 20 நிமிடங்களாவது ஆனது. சுகன்யாவை சுற்றிலும் ஒயர்கள். இடுப்பின் கீழ் சுத்தமாக மரத்துப் போனது. தொடு உணர்வு மட்டுமே இருந்தது. வலி இல்லை. யாராவது தொட்டால் உணர முடிந்தது. முதலில் குழந்தையின் இதயத்துடிப்பு சிறிது குறைந்தது. உடனே ஆக்ஸிஜன் குழாய் சுகன்யாவிற்கு பொருத்தப் பட்டது. அடுத்தது சுகன்யாவிற்கு குளிர் எடுக்க ஆரம்பித்தது. அறையின் AC அணைக்கப்பட்டது. காய்ச்சல் வர ஆரம்பித்தது. அதற்கு ஊசி மூலம் மருந்து ஏற்றப்ப்ட்டது.

இந்தமாதிரி சூழ்நிலைக்கு ஓரளவிற்கு ஆயத்தமாய் இருந்தாலும் ஒரு பக்கம் தடுமாற்றம் இருந்தது. சிறிது நேரத்தில் குழந்தை தலையின் பின் புறத்திற்கு பதில் முகம் கருப்பையின் வாய் பகுதியில் இருந்தது. ultrasound scan மூலம் அதை உறுதி செய்தனர். அறுவை சிகிச்சைதான் நல்லது என்றனர். ஏற்கனவே ஓரளவிற்கு தயாராய் இருந்ததால் சரி என்றோம். பிற்பகல் 1 மணிக்கு அறுவை சிகிச்சை. சுகன்யா ஏறக்குறைய 24 மணி நேரம் தூங்கவில்லை. அடுத்து அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள். epidural நிறைய கொடுத்தனர். நேரடியாக கருப்பையில் paracetamol 975 mg மற்றும் ஊசி மூலம் anti biotic. இதையெல்லாம் பார்த்தே நான் களைத்துப் போயிருந்தேன். பெற்றோரும் பதற்றத்துடனே இருந்தனர். சுகன்யா மட்டும் தான் தெளிவாக இருந்தாள். ஆனால் சுகப் பிரசவம் இல்லையென்ற ஏமாற்றம் சுகன்யாவுக்கு. திட்டமிடப்படாத அறுவை சிகிச்சையென்பதால் என்னை அறைக்குள் அனுமதிக்கவில்லை. சுகன்யாவிடம் விடை பெற்றுக் கொண்டு பெற்றோருடன் வெளியேக் காத்திருந்தேன்.

1 மணி நேரம் கழித்து குழந்தையைப் பார்க்க அழைத்தனர். ஆண் குழந்தை. எங்களுக்கு ஏற்கனவே தெரியும் ஆனால் பெற்றோர்களுக்குத் தெரியாது. சுகன்யா ஒரு மணி நேர ஓய்விற்குப் பின் அறைக்கு அழைத்து வரப் பட்டார். அறுவை சிகிச்சை முழுமைக்கும் விழித்தே இருந்திருக்கிறாள். அவள் பார்க்க முடியாதபடி முகத்திற்கு முன் ஒரு திரை மட்டும். மயக்க மருந்து நிபுணர் அவளுக்கு நடப்பதை விவரித்துக் கொண்டே இருந்திருக்கிறார். குழந்தையை வெளியே எடுத்தவுடன் சுகன்யாவிடம் காண்பித்திருக்கின்றனர். ஆனால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாத ஒரு சோர்வு. குழந்தையைக் குளிக்கவைத்து மறுபடி கொண்டுவந்து முத்தம் கொடுக்க சொல்லியிருக்கின்றனர்.

சுகன்யா, அவள் பெற்றோருக்கு ஒரே குழந்தை. அவர் அப்பா இருந்த நிலையைக் கண்டு எனக்கு மிகவும் கவலை. ஒரு வழியாக அவரும் தெளிந்து என் அப்பாவுக்கு கை கொடுத்து அணைத்துக் கொண்டார். என் அம்மாவுக்கும் சந்தோஷம். சுகன்யாவுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி என்றார் சிரித்துக் கொண்டே. பிரசவம் சிங்கப்பூரில் நடந்ததில் எனக்கு நல்லது. இந்தியாவில் இருந்திருந்தால் சுகன்யாவுடன் அந்த நேரத்தில் இருந்திருக்க முடியாது. நானும் தைரியசாலி ஆனேன் :) எனக்கும் சுகன்யாவுக்கும் கபிலன் என்ற பெயர் மேல் ஆசை. எங்கள் பெற்றோர்களுக்கும் பிடித்திருந்ததால் பெயர் கபிலன் ஆனது.

Comments

Very very nice venkat.... i wish kapilan a prosperous and successful life.
Unknown said…
man this post is fantastic... as said before congrats for you becoming a father and congrats again for this nice writing, you have a good story telling capacity...
BalHanuman said…
அன்புள்ள வெங்கடாசலம்,

உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் என் வாழ்த்துக்கள். குழந்தை கபிலனுக்கு என் ஆசிகள்.

--ஸ்ரீனிவாசன் (கலிஃபோர்னியாவிலிருந்து....)
ஹரிதா said…
வாழ்த்துக்கள் வெங்கட்...உங்கள் அனுபவம் அருமையானது

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...