ஹைதராபாத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தேன். கவிஞர்.வா.மணிகண்டன் தான் என்னை எஸ்.வி.ஆருக்கு அறிமுகப்படுத்தினார். எனது அலுவலகம் எஸ்.வி.ஆரின் வீட்டுக்கு அருகில் இருந்ததால் மாலை நேரங்களில் அவரது வீட்டுக்கு செல்வது வழக்கம். ஹைதராபாத் திரைப்பட சங்கத்தின் திரைப்படங்களை அமீர்பேட் சாரதா ஸ்டுடியோஸிலும் சில சமயம் எல்.வி.பிரசாத் ப்ரிவ்யூ திரையரங்கிலும் காண முடியும். வார நாள்களில் திரைப்படம் என்றால் எஸ்.வி.ஆர் -உடன் செல்வது வழக்கம். மற்ற நாள்களின் மாலை நேரங்களில் பஞ்சாரா ஹில்ஸ் தாவரவியல் பூங்காவி்ல் ஒரு மணி நேரம் போல அவருடன் பேசிக்கொண்டே நடப்பது தான் வேலை. விடாமல் பேசிக் கொண்டே இருப்பார். சமகால வரலாறில் பெரிதும் ஈடுபாடு உடையவர். ரொம்ப சாதரணமாக பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியைப் பற்றிப் பேசுவார்.
எழுத்தாளர் அசோகமித்திரன், இ.பா, திலிப்குமார், க்ரியா ராமகிருஷ்ணன், திருப்பூர் கிருஷ்ணன், தி.க.சி போன்ற பலரைப் பற்றி அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். 2008 புத்தகக் கண்காட்சியின் போது திலிப்குமாரையும், க்ரியா ராமகிருஷ்ணனையும் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். க்ரியா ராமகிருஷ்ணன் எஸ்.வி.ஆர் பற்றிய பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
2008 ஆம் ஆண்டு மத்தியில் நான் சிங்கப்பூர் வந்து விட்டேன். வா.மணிகண்டனும் மலேசியா, ப்ரான்ஸ் என பறந்து கொண்டிருந்தார். ஒரு முறை மணிகண்டன் இதைப்பற்றி பேசும்போது எஸ்.வி.ஆருக்கு நாம் இருவருமே ஹைதராபாத்தில் இல்லாதது கொஞ்சம் வருத்தம் எனக் கூறியிருந்தார்.
எஸ்.வி.ஆர் ஒரு முறை “Signs of existence" என்ற தலைப்புடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். மிகுந்த குற்ற உணர்வுடன் நெகிழ்ந்தும் போனேன். அவருடைய ஒவ்வொரு கட்டுரை வெளிவந்ததும் எனக்கு மின்னஞ்சலில் இணைத்து அனுப்புவார். என் திருமணம் பற்றி தெரிவித்து அழைத்த போது ரொம்பவே மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார். திருமணம் முடிந்து சில நாள்கள் கழித்து ஒரு வாழ்த்து மின்னஞ்சல் உடன் ((Best wishes for a meaningful married life.Grhasthasramam , properly used, is a great ladder to subllime elevation), தினமணியில் அவர் எழுதிய “அன்று ஒரு விக்ருதி” என்ற கட்டுரையையும் அனுப்பியிருந்தார்.
நான் அவருடன் ஹைதராபாத்தில் இருந்த நாள்களில் தான் ஒரு திருடனின் சுயசரிதை எனற கட்டுரை எழுதினார். இதற்காக அவருடைய டைரியில் எழுதி எழுதி பார்த்தார். அது நன்றாக இருக்கிறது என அவர் மனைவி, வா.மணிகண்டன், நான் என எல்லோரும் சொன்ன பிறகுதான் கணிணியில் எழுதினார். ஒவ்வொரு கட்டுரைக்கும் உற்சாகமாக உழைப்பார். வா.மணிகண்டன் சில சமயங்களில் எஸ்.வி.ஆரை பற்றி பேசும்போது பிரமிப்புடனே பேசுவார். அவருடைய அது அந்தக் காலம் புத்தகத்தை என் அம்மாவிடம் கொடுத்து இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிக்க வேண்டுமென போன மாதம் தான் சொன்னேன்.
இந்த ஆண்டு புத்தக கண்காட்சி சமயத்தில் தான் எஸ்.வி.ஆரு க்கு உடல் நலமில்லை எனவும், மனம் தளர்ந்து போய் இருக்கார் எனவும் வா.மணிகண்டன் கூறினார். நேற்று இரவு எஸ்.வி.ஆரின் மகளிடம் இருந்து மின்னஞ்சல் வந்து இருந்தது. இரவு வெகு நேரம் வரை தூக்கமே வரவில்லை. ஒருமுறை அவரிடம் பேசியிருக்கலாம். குற்ற உணர்ச்சியுடன் தான் இதை எழுதிக் கொண்டு இருக்கிறேன். அவர் எனக்கு அறிமுகப்படுத்திய “Story of Mankind" புத்தகத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.
Comments
ஆத்மார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களது இந்தப் பதிவு சந்தோஷமாக இருந்தது. போன வாரம்தான் ஒரே மூச்சில் அவரது 'அது அந்தக் காலம்' மற்றும் 'வைஸ்ராயின் கடைசி தினங்கள்' இரண்டும் படித்து முடித்தேன்.
உங்கள் நேரம் அனுமதித்தால், உங்கள் பார்வைக்கு...
http://balhanuman.wordpress.com/category/s-v-ramakrishnan/
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்