Skip to main content

2008 - கடந்து வந்தவை (சுஜாதா, இருளர்கள், காஞ்சிவரம்)

2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹைதராபாத்தில் இருந்தேன். பெங்களூரைப் போன்ற எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத புத்தாண்டு தினம்.

ஆண்டுதோறும் பொங்கல் சமயத்தில் ஊரில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் இந்த ஆண்டும் நாங்களே கோப்பையைக் கைப்பற்றினோம். ஐந்தாவது முறையாக இத்தொடரில் வென்று(?) கோப்பையைக் கைப்பற்றினோம். கேள்விக்குறிக்கு ஒரு காரணம் இருக்கிறது. இதுவரை ஐந்து முறை இந்த போட்டித்தொடர் நடந்துள்ளது. முதல் மூன்று முறை போட்டியை நடத்தும் அணி நேரடியாக அரையிறுதியில் விளையாடியது :) கடைசி இரண்டு முறை நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடியது. இதை யாரும் கேட்பதுமில்லை. அனைவருக்குமே ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டுமென்ற ஆசை மட்டுமே உள்ளது. தோற்பது ஜெயிப்பது பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏறக்குறைய அனைவருமே ஊரில் ஒரே சமயத்தில் இருக்கும் நாட்கள் என்பதால் இது ஒரு கூட்டு சந்திப்பு போலவே நடக்கிறது. 2009 ஆம் ஆண்டும் நடக்கும் :) கோப்பை யாருக்கென்று பார்ப்போம்.

பிப்ரவரி மாதத்தின் ஒரு இரவு நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா மறைந்த செய்தி வந்தது. வாசகனாக இந்த ஆண்டின் பெரிய இழப்பென உணர்ந்த சம்பவம்.

2008 இன் முதல் ஆறு மாதம் ஹைதராபாத்திலும் மீதி சிங்கையிலும் என வாழ்க்கை. ஏறக்குறைய கடந்த எட்டு ஆண்டு காலமாக காரைக்குடி, பெங்களூர், ஹைதராபாத், பேங்காக் தற்போது சிங்கப்பூர் என ஊர் சுற்றும் உற்சாகத்துடனே இருக்கிறேன்.

இந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவல் தொடர் வாசிப்பில் ஆழ்த்திய நாவல். சென்னையின் வரலாற்றை சில தனி மனிதர்களின் வாழ்க்கையோடு படித்தது ஒரு நல்ல அனுபவம். கோபிகிருஷ்ணனின் ’உள்ளேயிருந்து சில குரல்கள்’ நாவலை இந்த ஆண்டுதான் படிக்க நேர்ந்தது. படித்துக் கொண்டிருக்கும் போதே மிகக் கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்திய நாவல். நடைமுறை வாழ்க்கையின் பாசாங்குகளில் லயித்திருக்கும் என்னைப் போன்ற ஒருவனால் வேறெந்த எதிர்வினையாற்றவும் முடியாதென்றே நினைக்கிறேன். சுஜாதாவின் சில கணேஷ் வசந்த் நாவல்களையும் சில கட்டுரைத் தொகுப்பையும் வாசிக்க நேர்ந்தது. ஒருவித உற்சாகமான மனநிலையை ஒவ்வொரு கட்டுரையும் கதையும் தந்தபடியே உள்ளன. ஜெயமோகனின் காடு மற்றும் சங்கச்சித்திரங்கள் ஒரு கனவுலக வாசியை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன.
கிழக்குப் பதிப்பகத்தின் ”விண்வெளி” மற்றும் ”இருளர்கள் - ஒர் அறிமுகம்” புத்தகம் இங்கு முன்னதாகவே வந்திருந்ததினால் அவர்களின் மொட்டை மாடி கூட்ட அறிமுகத்தின் முன்பே வாசிக்க முடிந்தது.

விண்வெளி புத்தகம் தமிழில் வெளி வந்திருக்கும் முக்கியமான அறிவியல் புத்தகம். Apogee, Perigee , geo synchronous orbit போன்ற ஏராளமானவற்றின் விளக்கங்களை இவ்வளவு எளிமையாக கூற முடியுமென்றே நினைத்திருக்கவில்லை.

”இருளர்கள் - ஓர் அறிமுகம்” என்ற புத்தகத்தை வாசிப்பது நல்ல அனுபவமே. ஆனால் ஒரு இனக்குழுவின் வரலாற்றை அறிமுகம் செய்யும் முறை இதுவல்ல என்றே தோன்றியது. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் தேவைப்படும் இத்துறையில் தகவல்கள் என்ற பெயரில் ஆசிரியர் நிறைய யூகங்களை உபயோகப்படுத்தியிருக்கிறார். சில ஊர்களின் பெயரைக் குறிப்பிட்டு இதில் இருந்து இங்கு முற்காலங்களில் இருளர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதற்கு பெயர்களே சான்று எனக் கூறுவது வரலாற்றாய்வாளர்களை நையாண்டி செய்யும் வேலை. புத்தக அறிமுக கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று எழுத்தாளர் யூகங்களைக் கையாளக் கூடாதா என்பது. வரலாறு என்பது யூகங்களால் ஆனதல்ல.இத்துறையின் எழுத்தாளருக்கு ஒரு துளி சமரசமும் இதில் இருக்கக் கூடாது. இத்துறை சார்ந்த புத்தகங்கள் தமிழில் வெகுவாக இல்லாத நேரத்தில் இந்த புத்தகம் மிக முக்கியமான வரவு. ஆனால் கறாரான விமர்சனங்கள் மட்டுமே எதிர்காலத்தில் பிழைகளற்ற வரலாற்றுப் புத்தகங்கள் வர உதவும். கவிஞர் ஹரன் பிரசன்னாவின் அறிமுகம் நாளேடுகளில் திரைப்படங்களுக்கு வரும் விளம்பரம் போன்றது. மானுடவியல் பற்றி சிறு பிரக்ஞையும் அற்று எழுதப்பட்டது. கண்மணி குணசேகரனின் உழைப்பு இப்புத்தக்த்தில் வெளிப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

தமிழ் வலைதளங்களில் நாகார்ஜுனன் அவர்களின் வலைதளமும் பத்ரி அவர்களின் வலைதளமும் இந்த ஆண்டு அதிக முறை சென்று வாசித்தவை.

இந்த ஆண்டின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் காஞ்சிவரம். சொந்த ஊரைப் பற்றிய திரைப்படம் என்பதால் ஏற்பட்ட ஒரு பரவசம். காஞ்சிபுரத்தில் இன்று மிக சாதாரணமாக இருக்கும் பட்டு கூட்டுறவு சங்கங்களின் தோற்றத்துக்கு முந்தைய காலத்தின் நெசவாளிகளின் வரலாறு. திரு கே.எஸ்.பார்த்தசாரதி அவர்களால் 1949 ஆம் ஆண்டு காமாட்சி பட்டு கூட்டுறவு சங்கம் நிறுவப்பட்டது. இன்று வரை பெரிய சங்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மிக செழிப்பாக இருந்த தொழில் இன்று ஒருவித தேக்க நிலையை அடைந்து விட்டிருக்கிறது. 80 களின் இறுதியிலும் 90 களின் ஆரம்பத்திலும் காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் உற்பத்தி அவற்றின் உச்ச நிலையில் இருந்தது. கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மட்டுமே அவற்றிற்கான சேலையை உற்பத்தி செய்து தர முடியும். எங்கள் கிராமத்தில் காமாட்சி, அண்ணா மற்றும் முருகன் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் அதிர்ஷ்டம் வாய்க்கப் பட்டவர்களாகவே கருதப்பட்டனர். இந்த சங்கங்கள் பொங்கல் சமயத்தில் நல்ல ஊக்கத் தொகையை அளித்து வந்தன. இக்கால கட்டங்களில் பல சிறுவர்கள் பள்ளிப்படிப்பை விட்டு சேலை உற்பத்தி செய்பவர்களின் உதவிக்காக வேலைகளில் அமர்த்தப் பட்டனர். பிள்ளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொழிலைக் கற்றுக் கொண்டு பின்பு சொந்தமாக தறி போட்டு சேலை நெய்வான் என்ற நம்பிக்கையின் உந்துதல் பெற்றோர்களை தூண்டியது. ஏறக்குறைய தறி வைத்திருப்பவர்கள் அனைவரின் வீட்டிலும் சிறுவர்கள் வேலைக்கு சேர்ந்தனர்.

இந்த சமயத்தில் தான் இறையன்பு அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியாளராக பணியில் சேர்ந்தார். குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க அவர் பல சலுகைகளை கொண்டுவந்தார். அவை வெற்றி பெறவில்லையென்றே நினைக்கிறேன். ஆனால் 96 க்கு பிறகு தொழிலின் தேக்க நிலை தொடங்கியது. சேலை உற்பத்திக்கான ஊதியம் பெற மக்கள் மிக விரைவில் சேலையை உற்பத்தி செய்தனர். முதன் முதலாக கூட்டுறவு சங்கங்களில் ஒரு சேலைக்கும் அடுத்த சேலைக்கும் உள்ள நாட்கணக்கை அதிகப் படுத்தின. இது மிகப்பெரிய அளவில் நெசவாளர்களை பாதித்தது. விலை உயர்ந்த சேலைக்கான உற்பத்தி ஊதியம் சாதாரண சேலையின் உற்பத்தி ஊதியத்தை விட அதிகம். அதனால் ஏறக்குறைய எல்லோருக்கும் சாதாரண சேலை உற்பத்தி வேலையே கொடுத்தனர். திடிரென மொத்த தொழிலும் முடங்கிய நிலை. இதற்கு பிறகு சிறுவர்கள் வேலையிலிருந்து ஏறக்குறைய மொத்தமாக நிறுத்தப்பட்டனர். மாதத்தில் பாதி நாட்கள் நெசவாளர்கள் வேலையில்லாமல் இருக்க ஆரம்பித்தனர். பொங்கல் ஊக்கத் தொகை மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. காஞ்சிபுரம் காந்தி ரோடில் உண்வகங்கள் நெசவாளர்களை நம்பியே இயங்கி வந்தன. அவற்றில் சில மூடப்பட்டன.

கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தொழில் சீரடைந்து வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியில் காட்டிய கவனம் விற்பனையில் காட்டப்படாதது ஒரு காரணமாக இருந்தது. தற்போது விற்பனையிலும் அவர்கள் கவனம் கூடி இருக்கிறது என்றே தோன்றுகிறது.காஞ்சிபுரத்தின் மிக முக்கியமான அடையாளமாக பட்டுசேலை நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன. இத்தொழில் வளருமென்று எல்லோரையும் போல என் ஆசையும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Comments

வெங்கடாசலம் நீங்க அய்யங்கார் குளமா? ரொம்ப சந்தோஷம். எங்க வீடு அப்துல்லாபுரத்துல தான் இருக்கு. எங்க படிச்சீங்க.

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...