Skip to main content

கணேஷ் - வசந்த் கதைகள்

சில நாட்களுக்கு முன்பு சுஜாதாவின் கணேஷ் வசந்த் நாவல்களைப் பற்றிய வலைப்பக்கத்தை பார்க்க நேர்ந்தது. நானும் சில கணேஷ் வசந்த் நாவல்களை பற்றி சில வரிகள் எழுதலாமென தோன்றியது. நான் படித்த நாவல்கள் எழுத பட்டக் காலத்தைப் பற்றியும் அவற்றின் கால வரிசைகளைப் பற்றியும் ஒன்றும் தெரியாததனால் கதைக் குறிப்புகள் மட்டும் சில வரிகள்.சுஜாதாவின் கதைகள் சொல்லப் பட்ட விதத்தாலேயே வாசகர்களுக்கு ஒரு துள்ளலான மன நிலையை அளித்தன. வசந்தின் சொல்லி முடிக்கப்படா ஜோக்குகளும், கண் மறைவில் சொல்லப் பட்டு ,கேட்ட பெண்ணின் எதிர்வினைகள் மட்டுமென வாசகனுக்கு அறிமுகமான சில ஜோக்குகள் என பிரசித்தம். வசந்த் சில கதைகளில் பாரதி கவிதைகளையும் உபயோகத்திருப்பார். அப்துல் ரகுமான், மேத்தா போன்றொரின் கவிதைகளும் அடக்கம். கன்னம் வைப்பதைத் தவிர அனைத்து வேலைகளையும் வசந்த் செய்திருப்பார். ஒரு கதையில் அவரே இதைக் குறிப்பிட்டிருப்பார். சில முறை அந்த மாதிரி வேலைகளில் தாக்கப் பட்டிருப்பார். நைலான் கயிறில் கணேஷ் , வசந்தின் இம்மாதிரி வேலையைச் செய்து போலிஸிடம் அகப்பட்டு பின்பு சமாளித்து வெளிவருவார். ஏறக்குறைய எல்லாக் கதைகளின் துப்பறிதலிலும் Mistrust the Obvious என்பதே கணேஷின் அடிப்படையாக இருக்கும்.

நைலான் கயிறு, பாதி ராஜ்யம் மற்றும் ஒரு விபத்தின் அனாடமி போன்ற நாவல்களில் கணேஷ் மட்டுமிருப்பார்.இம்மூன்று நாவல்களின் குறிப்புகள் இங்கே.

நிர்வாண நகரம்

சென்னை நகர இளைஞன் ஒருவன் கோபத்தாலும், இயலாமையாலும் சென்னையைப் பழி வாங்க வேண்டுமென நினைக்கிறான். சில கொலைகளைச் செய்யப் போவதாக வரிசையாக காவல்துறைக்குக் கடிதங்கள் எழுதுகிறான்.பெயர் சிவராஜன், திருவல்லிக்கேணி மேன்சன் வாசி. ஆனால் தான் கொல்லப் போகிறவர்களின் அடையாளங்களைத் தெளிவாகக் குறிப்பிடுவதில்லை.ஒவ்வொரு கடிதத்திற்குப் பிறகும் குறிப்பிட்டபடி ஒவ்வொருத்தராக கொல்லப் படுகிறார்கள். போலிஸ் இவனைத் தேடுகின்றனர். கணேஷ் வசந்த் இங்கிருந்துதான் வருகிறார்கள். அவர்களும் இவனைத் தேடுகின்றனர். இதற்கிடையில் இவனுக்கு காதலியுடன் கல்யாணம் நிச்சயமாகிறது.கல்யாணத்துக்கு முந்தைய நாள் கணேஷ் வசந்த் இவனைக் கண்டுபிடிக்கின்றனர். அங்கு ஒரு திருப்பத்துடன் கதை முடிகிறது.சிவராஜன் என்ற பெயரால் சில பிரச்சினைகள் வந்ததாக சுஜாதா ஒருமுறைக் குறிப்பிட்டுள்ளார்.

வஸந்த்! வஸந்த்!

கூழமந்தல் எனும் கிராமத்தில் உள்ள ராஜராஜன் கிணறு எனும் ஒரு பழங்கால கிணறு ஒன்றின் மர்மத்தில் ஆரம்பிக்கும் இந்த கதையில் வஸந்த் நிறைய கஷ்டபட்டிருப்பார். ஒருமுறை விஷம், இறுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு காப்பாற்றப் படுவார். ஒரு வரலாற்றுப் பேராசிரியரின் வரலாற்றுக் குறிப்புக் காணாமல் போவதில் இருந்து கதை ஆரம்பிக்கும். கிணற்றை ஒரு சமூக விரோதக் கும்பல் ஏதோ ஒரு காரணத்துக்காக உபயோகப் படுத்திக்கொள்கின்றனர். புதையலா, ஏதேனும் பழங்கால சிலையா எனத் தெரியாமல் கணேஷும் வஸந்தும் துப்பறிவார்கள். இதற்குள் சிலர் தாக்கப் படுவதும் ஒரு கொலையும் நடந்துவிடும். வஸந்த் வழக்கம் போல சைடில் ஒரு பெண்ணையும் மேத்தமேட்டிக்ஸ் பண்ணிக்கொண்டிருப்பார். இறுதியில் வசந்த் வில்லனிடம் மாட்டிக் கொண்டு துப்பாக்கியின் ஒரு தோட்டாவை உடம்பில் வாங்கிக் கொள்வார். கணேஷ் போலிஸுடுன் வந்து அவர்களைக் கைது செய்து வசந்தை காப்பாற்றி கதை நிறைவு பெறும்.

கொலையுதிர் காலம்

ஒரு பெண்ணின் சொத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போய் ஏற்படும் சவால்கள் நிரம்பியக் கதை. பேய், ஆவி என நிறுத்தாமல் வாசிக்கச் சொல்லும் ஒரு கதை. அந்த பெண்ணின் பரம்பரையில் ஒரு பெண் கொடுமைப் படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அது ஆவியாக உலவி அந்தப் பரம்பரையைப் பழி வாங்குவதாகவும் அந்த ஊரே நம்பிக் கொண்டிருக்கையில் வஸந்தும் கணேஷும் பேயைப் பார்க்கவும் செய்கின்றனர். கணேஷ் பேயிடம் அடியும் வாங்குகிறார். சொத்துக்கு இன்னொரு வாரிசான வியாசனின் மேல் சந்தேகமிருக்க அவரும் கொல்லப் படுகிறார். இறுதியில் திடிரென வரும் ராமபத்ரன் எனும் ஐ.ஐ.டி பேராசிரியர் தான் கொலையாளி எனக் கண்டுபிடிக்கின்றனர். கதை மிகமிக வேகமாக சென்று திடிரென முடிந்துபோகும்.பொதிகையில் 90 களில் நாடகமாகவும் வந்துள்ளதாகத் தெரிகிறது.

ஐந்தாவது அத்தியாயம்

ஒரு திருமணமான பெண் தம்பு செட்டித் தெருவில் உள்ள கணேஷ் வசந்த் அலுவலகத்துக்கு ஒரு வார இதழுடன் வருகிறார். அந்த இதழில் வரும் தொடர்கதை தன்னைக் குறிப்பதாகச் சொல்கிறார். ஐந்தாவது அத்தியாயத்தின் போது தான் கொல்லப் படுவோமென பயந்து இவர்களிடம் வருவார். அவர் தன் கணவரின் மேல் சந்தேகப் படுவார்.வசந்த் கதையை எழுதுபவரை கண்டுபிடுப்பார். ஆனால் அவர் எங்கிருந்தோ கொரியரில் வரும் கதையை தட்டச்சு செய்து அனுப்புபவர் மட்டும்தான் எனத் தெரியும். ஆனால் கடைசியில் அந்த பெண் கணவரைக் கொன்று விடுவார்.தற்காப்புக்காகக் கொன்றதாக சொல்லுவார். குற்றவாளி யார் என்பதை சுஜாதா வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவார்.

ஆயிரத்தில் இருவர்

ஒரு (எத்திராஜ்) பெண்ணும் தந்தையும் கணேஷிடம் வருவார்கள். அவரின் மூத்த மகள் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசரை மணந்து ஒரு வருடம் முன்பு குஜராத் அகமதாபாத்தில் கேஸ் அடுப்பு வெடிப்பினால் இறந்து போய் இருப்பார். அது விபத்து இல்லையென்றும் மகளின் மாமனார், மாமியார் மற்றும் கணவருமே அவளைக் கொன்று விட்டனர் எனவும் கூறுவர். கூடவே மூத்த மகள் எழுதிய ஒரு கடிதத்தையும் காண்பிப்பார். கணேஷ் - வசந்த் தங்கள் வேலையைத் துவங்குவார்கள். ஐ.ஏ.எஸ் ஆபிசர் குடும்பத்தின் நடவடிக்கைகள் சந்தேகங்களை வலுப்படுத்தும். கணேஷும் வசந்தும் ஒருமுறைத் தாக்கப் படுவார்கள். ஆபிசர் இரண்டாவதாக மணப்பதாக இருக்கும் பெண் திடிரென தாக்கப் படுவார். அவர் தன்னை மிரட்டியது ஒரு தாத்தா என்று ஒரு சமயம் கூறுவார். திடிரென மாமனாரும் மருமகனும் ஒரே அணிக்கு வந்துவிடுவார்கள். தன் மருமகனை தவறாகப் புரிந்து கொண்டதாக இறந்த பெண்ணின் தந்தை கூறிவிடுவார். திடிரென் முட்டளாக்கப் பட்டதாக உணரும் கணேஷும் வசந்தும் இதன் பின்னணியை கண்டுபிடிப்பார்கள்.

கொலையரங்கம்

இதுவும் சொத்துப் பிரச்சனையின் பின்னணியில் நடைபெறும் சில கொலை முயற்சிகள் மற்றும் கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் யாரெனக் கண்டுபிடிப்பதுதான்.பீனா மற்றும் உத்தம் எனும் இருவருக்கும் பொதுவான சொத்திற்காக நடைபெறும் பிரச்சனை. இலங்கைப் போராளிகளின் வெடிகுண்டுடன் ஆரம்பிக்கும் கதை அதற்கு எந்த தொடர்புமில்லாதது. ஒரு மருத்துவமனையிலேயே பாதிக்கும் மேற்பட்டக் கதை நடக்கும்.கதை மருத்துவமனயிலேயே நிறைவு பெறும். முதலில் பீனா மீது சந்தேகம் வர, பின் அவரே கத்தியால் குத்தப் பட்டு மோசமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவார். அமெரிக்காவில் குடிபெயர்ந்துவிட்ட இன்னும் இருவருக்கு அந்த சொத்தில் பாத்யதை இருந்தும் அவர்கள் வேண்டாமென்று எழுதிக் கொடுத்துவிட்டிருப்பர். அதில் ஒருவர் இந்த சமயத்தில் வேலை சம்பந்தமாக சென்னை வர அவர் மேல் சந்தேகம் வர அவரும் கொலை செய்யப்படுவார். அனைத்தும் மறுபடி முதலில் இருந்து தொடங்கும். வசந்த்க்கு மருத்துவமனையில் கத்திக்குத்து என நீண்டு கணேஷ் இறுதியில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பார்.

பிற நாவல்கள் குறித்து சில நாட்களுக்குப் பிறகு...

Comments

தீபாவளி வாழ்த்துக்கள் !
சலம் said…
நன்றி..உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
BalHanuman said…
Dear Venkatachalam,

Excellent compilation of all Ganesh/Vasanth stories.

Thanks a lot.

May I wish you and your family a Very Prosperous New Year 2010!

May The New Year usher in an era of everlasting prosperity, achievement and joy and fulfillment in all walks of your life!

Srinivasan

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...