கடந்த ஜூன் மாதம் 7 ஆம் நாள் ஹைதராபாத்திலிருந்து சிங்கைக்கு கிளம்ப வேண்டியிருந்தது. முன் கூட்டியே முடிவு செய்யப்பட்டிருந்த பயணம் என்றாலும் ஊருக்கு போய் சில நாட்கள் தங்கியிருக்க முடியாமல் அவசர அவசரமாய் திரும்பி வந்ததாலோ என்னவோ கொஞ்சம் தடுமாற்றத்துடனே கிளம்பினேன். இரவு 11.50 மணி விமானத்திற்கு 7.30 மணிக்கே கிளம்பிவிட்டேன். 8.15 மணிக்கே RADIO CABS ன் ஓட்டுனர் 8.30 மணிக்கே என்னை ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இறக்கி விட்டார்.
ஷம்ஷாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் பெயருக்கு ஏற்றார் போல நன்றாகவே இருந்தது. ஆனால் மிக நீண்ட, சர்வதேச விமானங்கள் கிளம்பும் இடங்கள் எல்லாம் காலியாகவே இருந்தது.
இதெல்லாம் பிரச்சனை இல்லை. மறுநாள் காலையில் என் பெரிய பொட்டியைத் தூக்கிக் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு தள்ளினேன்.தள்ளமுடியவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு வெள்ளையர் எப்படி தள்ள வேண்டுமென்று செய்தேக் காட்டினார்.அப்பாடா எங்க ஊர் மானத்தைக் காப்பாற்றி விட்டேன் என்று நினைத்துக்கொண்டேன்.பாங்காக் செல்லும்போது இதை எப்படி செய்யத் தவறினேன் என்று தெரியவில்லை.இங்கு சரியாக செய்துவிட்டேன்.
சிங்கைக்கு வந்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டன.Bedok Community Library க்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. எங்க ஊரில் இருக்கும் அரசாங்க நூலகத்தில நூலகர் உட்காரவே இடம் இருக்காது. ஒரு முறை மழை பெய்து ஏராளமான புத்தகங்கள் நனைந்து நிறையப் புத்தகங்களை மறுபடி மூட்டைகளில் கட்டி வைத்துவிட்டோம். என்ன விஷயம் என்றால் நூலகத்துக்கு சொந்த கட்டிடம் கிடையாது. ஆனால் ஆண்டு தோறும் 2000 புத்தகங்களுக்கு மேல் வரும். ஊர் பஞ்சாயத்து தலைவரின் ந்ல்லெண்ணத்தில் பஞ்சாயத்து கட்டிடத்தில் இருந்த 6க்கு 4 அறையை நூலகத்துக்கு தந்தார். அங்கு புத்தகங்களை அடுக்க முடியாது. குவிக்கத்தான் முடியும். மழை பெய்த ஒரு நன்னாளில் புத்தகங்கள் நனைந்து போகும் அளவுக்கு இருந்தது அந்த அறையும்.
இங்கு என்ன்வென்றால் 4 மாடி நூலகத்தில் நிறைய பேர் இருந்த இருக்கைகளில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.இங்கு நித்யகன்னி, கூகை போன்ற நாவல்களும் இருந்தன. வண்ணத்திரை போன்ற இதழ்களையும் காணமுடிந்தது.
இது கண்டிப்பாக வெளி நாடு செல்லும் சிலர் செய்யும் தாய் நாட்டைக் குறை கூறும் செயலல்ல. நாம் நூலகத்துறையிலும் சில தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கலாம். சென்னையில் நிறைய இடங்களில் தனியார் நடத்தும் சிறு நூலகங்களைப் பார்த்துள்ளேன். தனியார் நூலகம் தொடங்க வங்கிக் கடன்கள் எந்த அளவுக்கு உதவுமென்று யோசிக்கலாம்.
--
எங்கள் நிறுவனத்தில் ஒரு தமிழ் பெண் இருந்தார். நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலையகத்தைத் தமிழிலும் வடிவமைக்கும் ஒரு பணியைத் தொடங்கினர். அதற்கு இந்தப் பெண்ணை நியமித்தார்கள். எங்களின் உதவியையும் நாடினர். என் அறை நண்பர் தானே உதவுவதாக மேலாளரிடம் கூறினார்.
இவர்களுக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை. முதலில் வலைப்பக்கத் தலைப்புகளை மொழிபெயர்க்கும் பணியில் இறங்கினர். ஒரு தாளில் தலைப்புகளை எழுதி அதை நெதர்லாந்தில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு மேலாளர் FAX அனுப்பினார் (அவரும் தமிழ் மொழி அறிந்தவர்). நெதர்லாந்து மக்கள் பதறிப்போய் இதை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வதென்று கேட்டனர். அப்போது தான் இவர்களுக்கு தமிழில் தட்டச்சு செய்து மின் கோப்பாகத் தர வேண்டுமெனப் புரிந்தது.
அடுத்து இவர்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுந்தது. தமிழில் தட்டச்சு செய்ய முடியுமா என்பதே இவர்களின் சந்தேகம்.
நான் இந்த சமயத்தில் அவர்களுக்கு முரசு அஞ்சல் பற்றியும் பிற யூனிகோட் தட்டச்சு மென்பொருட்கள் பற்றியும் விளக்க வேண்டி இருந்தது. நான் சொல்ல வந்தது இதைப் பற்றியல்ல. அந்த பெண்ணின் தமிழ் புலமையைப் பற்றியும் இன்னுமொரு முக்கியமான கவலையும். எங்கள் நிறுவனம் எஃகு இரும்பு குழாய்கள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனம். இந்தப் பெண் இரும்பை இறும்பாக்கினார். எனக்கு மற்றப் பிழைகள் ஏதும் தற்போது நினைவில்லை. மொழி பெயர்ப்பில் மிகவும் களைத்துப்போய் வேலையை விட்டே விலகினார். மொழி பெயர்ப்பு ஏனோ காஞ்சிபுரம் ராந்தம் நகரப் பேருந்து போல நட்டாற்றில் நின்று விட்டது. என் அறை நண்பரும் தன்னால் முடியாதென்றும் சென்னை போன்ற நகரமாய் இருந்தால் நான் இதை முடித்திருப்பேனென்றும் கூறிவிட்டார்.
நேற்று சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சியான வசந்தம் சென்ட்ரலில் தூள் என்ற நடனப் போட்டி ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது. திடீரென்று என் அறை நண்பர் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும் பெண் நம் நிறுவனத்தில் இருந்த பெண் தானே என்று கேட்டார். நான் அந்தப் பெண்ணை இலங்கைத் தமிழ் பெண் என்று நினைத்து இருந்தேன். ஆனால் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தால் எங்கள் ஊர் சுப்பிரமணி கோயிலில் இருக்கும் ரிஷப வாகனத்தின் வண்ணப்பூச்சு தான் ஞாபகம் வந்தது. நடனமும்(?) ஆடினார். அப்போது தான் பெயரை ஒளிபரப்பினார்கள். அதே பெண்தான்.
நம்மில் நிறைய பேர் தமிழைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். தமிழ் நாட்டில் சென்னையில் உள்ள மிகப்பெரும் நிறுவனங்கள் கூட அவர்களுடைய வலைப்பக்கத்தைத் தமிழில் உருவாக்க முன்வரவில்லை. ஆனால் நெதர்லாந்தைச் சார்ந்த ஒரு நிறுவனம் இந்தியாவில் எந்த தொழில் நடவடிக்கைகளும் இல்லாத ஒரு நிறுவனம் தன் வலையகத்தைத் தமிழில் உருவாக்க தயாராகிறது. உதவத்தான் யாருமில்லை.மறுபடி ஒருவர் மொழிபெயர்ப்பிற்காக வந்துள்ளார். அவரும் வசந்தம் தொலைக்காட்சியில் பணிபுரிபவரே. அவருக்கும் சில விளக்கங்களை அளித்துள்ளேன். நானும் அவரோடு சேர்ந்தே அதில் ஈடுபட்டுள்ளேன்.
உலோக பொருள்களின் வணிகத்தில் ஈடுபடும் நிறுவனத்திற்கான அழகான கலைச்சொற்களைக் கண்டடைவதில் தான் நிறைய சிக்கல்கள் உள்ளது.
Comments