Skip to main content

ஹைத‌ராபாத்தில் ஓர் ஆண்டு

இன்று காலையில் அலுவலக நண்பர்களின் வாழ்த்து செய்திகள் கொஞ்சம் புத்துணர்ச்சியை அளித்தன. இந்நிறுவனத்தில் என்னுடைய இரண்டாம் ஆண்டு தொடக்க நாள். கடந்த ஆண்டு இதே மாதம் 14 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து சார்மினார் எக்ஸ்பிரஸில் கிளம்பும் போது, கூடிய சீக்கிரம் சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்ற எண்ணத்துடனே இருந்தேன்.மறுநாள் காலை 8 மணிக்கு செகந்திராபாத் நிலையத்தில் நான் இருந்த பெட்டியிலிருந்து அனைவரும் இறங்கி விட்டனர். நம்பள்ளி நிலையத்திற்கு வந்து சேரும்போது மணி 9 ஆகிவிட்டிருந்தது. அங்கே காத்திருந்த நண்பனுடன் கிளம்பி யூஸுப்குடா வில் இருக்கும் அவனது அறையில் அன்று முழுவதும் இருட்டறையில் தூங்கியவாறே கழித்தேன்.பெங்களூரை விட இங்கு சாப்பிட ஹோட்டல் கண்டுபிடிப்பது பெரிய வேலை என்று முதல் நாளே புரிந்தது.பெங்களூரில் தெருக்கு தெரு சாகர் களும் நந்தினி போன்ற ஆந்திர வகை உணவகங்களும் நிறைந்தே இருக்கும். இதில் சாகர்கள் காபியைத் தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவை. கோரமங்களா கிருஷ்ணா கேஃப் போன்ற தெய்வ மச்சான்களும் சில இடங்களில் இருப்பார்க‌ள்.ஹைத‌ராபாத்தில் நீக்கமற நிறைந்திருப்பது பிரியாணி தோட்ட‌ங்க‌ளே.

15 ஆம் தேதி மாதாப்பூர் அலுவ‌ல‌க‌த்தில் சேர்ந்த‌ நாளில் இருந்து நிறுவ‌ன‌த்தின் விருந்தின‌ர் மாளிகையிலேயே த‌ங்கினேன். 18 ஆம் தேதி சுமார் 4 ம‌ணிக்கு அலுவ‌ல‌க‌த்தில் மெக்கா ம‌சூதியில் குண்டு வெடிப்பைப் ப‌ற்றிய‌ அறிவிப்பு வந்த‌து. மாலையே வீட்டிலிருந்து அழைப்பு வ‌ந்துவிட்ட‌து. மாதாப்பூர் அலுவ‌ல‌க‌த்திலேயே ஒரு மாத‌ம் இருக்க‌ வேண்டிய‌தாயிற்று. என‌க்கு ஏனோ மாதாப்பூர் அலுவ‌ல‌க‌ம் சுத்த‌மாக‌ப் பிடிக்க‌வில்லை. இத‌ற்கிடையில் வா.ம‌ணிக‌ண்ட‌னின் தொட‌ர்பால் அவ‌ருடைய‌ விடுதியிலேயே சேர்ந்தேன். நான் ப‌ஞ்சாரா ஹில்ஸிலிருக்கும் அலுவ‌ல‌க‌த்திற்கு வ‌ந்த‌வுட‌ன் மாதாப்பூர் விடுதியிலிருந்து தின‌மும் அலுவலகம் வ‌ருவ‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌மாக‌ இருந்த‌து. வா.ம‌ணிக‌ண்ட‌னின் மேலாள‌ரின் சிபாரிசில் மெஹ்திபட்டினத்தில் அவ‌ருடைய‌ ப‌க்க‌த்து வீட்டில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வ‌ந்து சேர்ந்தோம்.க‌ட‌ந்த‌ ப‌த்து மாத‌மாக‌ மெஹ்திப‌ட்டின‌த்தின் வாச‌ம் நகர வாழ்க்கைக்கே உரிய சில குறைகளோடு ந‌ன்றாக‌வே இருந்து வ‌ருகிற‌து.அதுவரை குமுதம் ஆனந்த விகடன் போன்றவற்றைத் தவிர வேறெதையும் பார்த்திராத நான் அறையில் புது எழுத்து, புதிய பார்வை, உயிர்மை, காலச்சுவடு, அம்ருதா போன்ற இதழ்களையும் வாசிக்க ஆரம்பித்தேன்.

ப‌ஞ்சாரா ஹில்ஸின் ROAD NO 10 ல் இருக்கும் KARVY அலுவ‌ல‌க‌க் கூட்டங்க‌ளுக்கு ந‌டுவில் இருக்கும் Prashanth Kuteer என்ற ஒரு மெஸ்ஸில் தான் அநேகமாக மூன்று வேளை உணவும்.வழியில் சில சைக்கிள் வண்டி கையெந்தி பவன்களில் சில சமயம் சாப்பிட்டு இருந்தாலும் பிரஷாந்த் குட்டீர் தான் பெரும்பாலான நாட்களில். இடையில் 4 மாதங்கள் பேகும்பட் இல் இருக்கும் அலுவலகக் கிளையில் இருக்க வேண்டியதாயிற்று.மணியும் அதே அலுவலகத்தில் தான் இருந்தார்.

தினமும் மெஹ்திபட்டினத்திலிருந்து பேகும்பேட் போலிஸ் ஆபிஸ் வரை 49M பேருந்தில் பயணிப்பது சற்று வித்தியாசமானது. நகர வாழ்வின் போரட்டம் நிறைந்த வாழ்க்கையை மெஹ்திப்பட்டினத்தில் நாளின் எந்த நேரத்திலும் உணரலாம். பர்தா மூடிய பெண்களும், பீடா நிறைந்த வாய்களும், அந்தக் கறை உலராத சாலைகளும், வழியெங்கும் நிறைந்த பழ வண்டிகளும் மெஹ்திபட்டினத்தின் அடையாளங்கள்.ஆக‌ஸ்ட் மாத‌ம் இர‌வு 8 ம‌ணிக்கு அலுவ‌ல‌கத்திலிருந்தபோது மணி லும்பினி கார்டனிலும் கோட்டி கோகுல் சாட்டிலும் குண்டு வெடித்திருப்பதை சொன்னார். அலுவ‌ல‌க‌ தொலைக்காட்சியில் பார்த்த‌போது ஒரே ர‌த்த‌க் காட்சிக‌ளாக‌ அசைந்து கொண்டிருந்த‌து.இர‌வு 9.30 ம‌ணிக்கு இருவ‌ரும் அலுவ‌ல‌க‌த்திலிருந்து கிள‌ம்பி இர‌வு 11.00 ம‌ணிக்கு மெஹ்திப‌ட்டின‌த்தில் இற‌ங்கிய‌போதும் அங்கு எந்த‌ மாற்ற‌த்தையும் காண‌ முடிய‌வில்லை.இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் முழு ந‌க‌ர‌மே குண்டுவெடிப்பைப் ப‌ற்றிய‌ ப‌ய‌த்தை ம‌ற‌ந்து போன‌து போன்ற‌க் காட்சிக‌ளே எங்கும் நிறைந்திருந்த‌து.

முத‌ல்வ‌ரின் SCORPIO வாக‌ன‌ வ‌ரிசையை நான் சில‌ முறை பார்த்திருக்கிறேன். அனைத்தும் ஒரே எண் கொண்ட‌ க‌றுப்பு நிற‌ வ‌ண்டிக‌ள். அவை சாலையில் செல்லும் போது ஒரே சீராக‌ செல்வ‌துமில்லை.த‌மிழ் நாட்டு முத‌ல்வ‌ர்க‌ளுக்கு இவ‌ர் எவ்வ‌ளவோ மேல். அவ‌ர் வ‌ருவ‌த‌ற்கு 5 நிமிட‌ங்க‌ள் முன்பு தான் போக்குவ‌ரத்து நிறுத்தப்ப‌டும் ம‌ற்றும் அவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரே நிமிட‌த்தில் போக்குவ‌ர‌த்து தொட‌ங்கிவிடும். ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் சென்னை நுங்க‌ம்பாக்க‌த்தில் ந‌ரேந்திர‌ மோடி வந்திருந்தபோது போக்குவ‌ர‌த்து ஏற‌க்குறைய 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது.இப்போது புதிய‌தாக‌ ஒரு பேருந்து முத‌ல்வ‌ருக்காக‌ வாங்க‌ப் ப‌ட்டுள்ள‌து. இனிமேல் SCORPIO வை பார்க்க‌ முடியுமா என்று தெரியவில்லை.

நான் ஹைத‌ராபாத்திலிருந்து ஊருக்கு வ‌ருவ‌து மிக‌ க‌டின‌மான‌ காரிய‌ம் என்றே நினைத்திருந்தேன்.ஆனால் காச்சிகுடா எக்ஸ்பிர‌ஸில் ப‌ய‌ண‌ம் செய்யும் வ‌ரைதான் அந்த‌க் க‌வ‌லையெல்லாம். மாலை 4 ம‌ணிக்கு காச்சிகுடா நிலைய‌த்தில் புற‌ப்ப‌டும் ர‌யில் ம‌றுநாள் காலை 5 மணிக்கு அர‌க்கோண‌ம் சென்றுவிடும்.எப்ப‌டியும் காலை 7 ம‌ணிக்குள் வீட்டுக்கு சென்று விடுவேன். மாலை 4 ம‌ணி முத‌ல் இர‌வு 9 ம‌ணி வ‌ரை ர‌யிலில் ப‌டித்துக் கொண்டே செல்வேன். சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் சில‌ முழுப் புத்த‌க‌ங்க‌ளை அந்த‌ நேர‌த்தில் ப‌டித்து முடித்திருக்கிறேன். இந்திரா பார்த்த‌சார‌தியின் குருதிப்புன‌ல், திஜா வின் அம்மா வ‌ந்தாள் ம‌ற்றும் அசோக‌மித்திர‌னின் ஒற்ற‌ன் என‌க்கு ந‌ன்கு நினைவிலிருக்கிற‌து. இத‌னால் நான் பெங்களூரிலிருந்தபோது இருந்த ஊருக்கு செல்லும் பயண இடைவெளிக்கும் ஹைதராபாத் வந்தபின் உள்ள ப‌ய‌ண‌ இடைவெளிக்கும் பெரிய‌ மாற்ற‌மில்லை.‌

ஹைத‌ராபாத்தில் என‌க்கு எழுத்தாள‌ர் எஸ்.வி.ராம‌கிருஷ்ண‌னும் அறிமுக‌மானார். ம‌ணியுட‌ன் சென்று ஹைத‌ராபாத் ஃப்லிம் கிள‌ப் இல் சில‌ ந‌ல்ல‌ திரைப்ப‌ட‌ங்க‌ளைப் பார்த்த‌ அனுப‌வ‌மும் என‌க்கு புதிய‌தே.ஹைத‌ராபாத் ப‌ல‌ வ‌கையில் சென்னை, பெங்க‌ளூரை விட‌ மேலானதே.

Comments

jovemac said…
அனுபவை ராஜா அனுபவை
சலம் said…
ஜோ. நன்றி :)
Vaikulla nuzhaiyatha niraiya oor pera solreenga.... tamil ilakiyatha ungalakku intro kuduththathu hyderabad a illa manikandan.. ethuva irunthaalum vaazhthukkal. Enakku chennai a thavira vera entha ooraiyum pidikala........

Iniyal.

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...